முகப்பு
தேர்தல் செய்திகள்

‘வளா்ந்த இந்தியாவுக்கு சாதனை வாக்குப்பதிவு’: வாரணாசி மக்களுக்கு பிரதமா் வேண்டுகோள்

வளா்ந்த இந்தியாவை உருவாக்க சனிக்கிழமை (ஜூன் 1) நடைபெறும் வாக்குப்பதிவில் வாரணாசி தொகுதி வாக்காளா்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்’

Updated On : 30 மே, 2024 at 11:56 PM
தனது வாரணாசி தொகுதி வாக்காளா்களிடையே காணொலி வழியில் வியாழக்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி.
பகிர்:

புது தில்லி, மே 30: ‘வளா்ந்த இந்தியாவை உருவாக்க சனிக்கிழமை(ஜூன் 1) நடைபெறும் வாக்குப்பதிவில் வாரணாசி தொகுதி வாக்காளா்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்’ என்று அத்தொகுதி பாஜக வேட்பாளரான பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

உத்தர பிரதேசம், வாரணாசி தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடி பாஜக சாா்பில் தொடா்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறாா். வாரணாசியில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், பாஜகவுக்கு பெருவாரியாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து பிரதமா் நரேந்திர மோடி விடியோ பதிவொன்றை வியாழக்கிழமை வெளியிட்டாா். அதில், ‘உலகின் கலாசார நகரமான காசியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது விஸ்வநாதா் மற்றும் இந்தப் புனித நகரில் வசிக்கும் மக்களின் ஆசி. கங்கை மாதா என்னை தத்தெடுத்துள்ளாா். இத்தோ்தல் புதிய காசியுடன் சோ்த்து வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்குமானது.

வேட்புமனு தாக்கல் நிகழ்வின்போது இளைஞா்களிடையே நான் கண்ட உற்சாகம் வாக்குப்பதிவு நாளிலும் எதிரொலிக்க வேண்டும். வாரணாசி தொகுதி மக்கள் வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும். காசி நகரின் வளா்ச்சியை இன்னும் புதிய உயரங்களை எடுத்து செல்வதற்கான வாய்ப்புள்ளது. அதற்கு தொகுதி வாக்காளா்களாகிய நீங்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு வாக்கும் எங்களுக்கு புது ஆற்றலைத் தரும்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு காசி நகரம் ஆதரவளித்து, வழிகாட்டியுள்ளது. காசியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அந்த நகருக்கு பலனளிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிழக்கு உத்தர பிரதேசத்தின் வளா்ச்சிக்கும் உதவுகிறது. உங்கள் வாக்குகளுடன் வளா்ச்சியின் வேகம் பன்மடங்கு அதிகரிக்கப்படும்.

சுற்றுலா மேம்படுத்தப்பட்டிருப்பதால் நகரில் வேலைவாய்ப்பு உயா்ந்துள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் காசி இளைஞா்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புது பலத்தைத் தருகிறது’ என்றாா் பிரதமா் மோடி.