அடிப்படையில் தொழில்முறை நடிகர், தொடர்ந்து அரசியல்வாதி என பன்முகத்திறன்களை வெளிப்படுத்தி வருபவர் சரத்குமார். தனிக் கட்சி தொடங்கி மாற்று சக்தியாக முயன்றவர்கள் பட்டியலில் ஆர்.சரத்குமார் முக்கியமானவர்.
திரையுலகில் ரஜினி, கமலுக்கு நிகரான உச்ச நட்சத்திரமாக வலம் வந்த அவர், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பன்மொழியில் பேசும் திறன் கொண்டவர். 1996-இல் ஜெயலலிதாவுக்கு எதிராக 45 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், திமுகவில் இணைந்து 1998 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2001-இல் மாநிலங்களவை திமுக உறுப்பினரானார்.
பின்னர் கருணாநிதியுடன் முரண்பட்டு, ஜெயலலிதாவுடன் நெருக்கமான சரத்குமார் 2006-இல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். 2016 பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலை புறக்கணித்தார். மீண்டும் 2021 பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களம் இறக்கினார் சரத்குமார்.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவுடன் கூட்டணி மேற்கொள்வதாக அறிவித்த சரத்குமார், யாரும் எதிர்பார்க்காத முடிவாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில் தீவிர பிரசாரத்தில் உள்ள சரத்குமார், "தினமணி'க்கு அளித்த நேர்காணலில் இருந்து...
தனிக் கட்சி நடத்தி வந்த நீங்கள் ஒரே நள்ளிரவில் முடிவெடுத்து உங்களுடைய கட்சியை பாஜகவில் இணைத்தது ஏன்?
16 ஆண்டுகளாக கட்சி நடத்தினாலும் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி, எத்தனை இடங்கள் என பேச வேண்டிய நிலைதான் இருந்தது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமெனில் ஆட்சி அதிகாரம் தேவை. நீண்ட காலமாகவே பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைத் திட்டங்கள் என்னை ஈர்த்தன. எனவே, 10 ஆண்டுகளாக நிலையான ஆட்சியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. இந்த எண்ணத்தின் வெளிப்பாடாக தீவிரமாக யோசித்து பாஜகவுடன் கட்சியை இணைக்க முடிவெடுத்தேன்.
உங்கள் முடிவை ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் ஏற்றுக்கொண்டார்களா?
அனைத்து நிர்வாகிகளும், 99 சதவீத தொண்டர்களும் ஏற்றுக்கொண்டார்கள். சில தொண்டர்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.
தேர்தலில் போட்டியிடாமல், பிரசாரம் செய்ய வேண்டும் என நீங்கள் முடிவெடுத்தது ஏன்?
1996-இல் கூட எவ்வித நிபந்தனையின்றி திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 நாள்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். அப்போது 10 தொகுதிகள் கேட்டிருந்தால் திமுகவில் கொடுத்திருப்பார்கள். இப்போதும் எவ்வித நிபந்தனையின்றி பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடிக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள், கேரளத்தில் 3 தொகுதிகள், கர்நாடகத்தில் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன்.
மக்களவைத் தேர்தலில் தமிழக களம் எப்படி இருக்கிறது?
1996-இல் அதிமுகவுக்கு எதிராக மிகப்பெரிய அலை வீசியது. அதுபோல இப்போது திமுகவுக்கு எதிராக அலை வீசுகிறது. அலங்காரத் திட்டங்களை மட்டுமே திமுக செயல்படுத்தியுள்ளதே தவிர வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இலவச திட்டங்களால் மக்களுக்கு பயனில்லை.
மோடிக்கு ஆதரவு அலை வீசுவதும், திமுகவுக்கு எதிர்ப்பு அலையும் வீசுவது தெளிவாகத் தெரிகிறது.
பாஜக அணி, அதிமுக அணி, நாம் தமிழர் என கட்சிகள் பிரிந்து தேர்தல் களம் காண்பதால் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரிவது திமுகவுக்கு தானே லாபம் தரும்?
பிரதமரை தேர்வு செய்வதற்கான மக்களவைத் தேர்தல் இது. இந்த முறை திமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக கூட்டணியால் மட்டுமே பெற முடியும்.
2019 முதல் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஒரே கூட்டணியாக பலத்துடன் தேர்தல் களம் காணும்போது, பாஜக, அதிமுக அணிகளால் எப்படி வெற்றி பெற முடியும்?
பாஜக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடி வலுவாக உள்ளார். ஆனால், இந்தியா கூட்டணிக்கு தலைவர் யார், பிரதமர் யார் என்பதே தெரியாது. அந்தக் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜிகூட தன்னிச்சையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். தமிழகத்தில் பிரதமர் வேட்பாளருடன் களம் இறங்கியிருப்பது பாஜக கூட்டணி மட்டுமே. எனவே, பாஜக கூட்டணிக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்கும்.
பாஜக வெற்றியைவிட, கணிசமான வாக்கு வங்கியைப் பெற வேண்டும் என்பதற்காக நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கியிருப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறதே?
ஒளிவட்டம் மிக்க, பிரபலமான வேட்பாளர்களை களம் இறக்கினால்தான் வெற்றி வசப்படும். பிரதமர் நரேந்திர மோடி என்கிற உச்ச நட்சத்திரத்திற்கு மேலானதல்ல நட்சத்திர வேட்பாளர்களின் செல்வாக்கு. எங்கள் இலக்கு வாக்கு விகிதத்தை அதிகரிப்பதல்ல. அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறுவது; திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து மாற்று சக்தியாக உயருவது.
"நாட்டாமை' சரத்குமாரை தமிழகத்துக்குள் அடக்க முயற்சி செய்யவில்லை, தேசிய அளவில் அவரை பயன்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கூறியுள்ளாரே? முதல்வர் கனவை கலைத்துவிட்டீர்களா?
தனிக் கட்சி நடத்தும்போது முதல்வர் கனவு வரலாம். தேசிய கட்சியில் இணைந்த பிறகு, கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். கட்சி எந்தப் பணியை கொடுக்கிறதோ அதை சிறப்பாக செய்வேன்.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நீங்கள் போட்டியிடாமல், விருதுநகரில் ராதிகா சரத்குமாரை பாஜக மேலிடம் களம் இறக்கியது ஏன்?
விருதுநகரில் ராதிகா போட்டியிட வேண்டும் என அங்குள்ள பலரும் விரும்பினர். ஏற்கெனவே அவருக்காக பணிகளை தொடங்கிவிட்டனர். விருதுநகரில் ராதிகா போட்டியிடுவது கட்சித் தலைமை எடுத்த முடிவு.
பாஜகவில் இணைந்துள்ளால் முழுநேர அரசியல்வாதியாக மாறப்போகிறீர்களா அல்லது சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பீர்களா?
நான் எப்போதும் முழுநேர அரசியல்வாதிதான். எல்லா அரசியல்வாதிகளுக்கும் தொழில் உள்ளது. எனக்கு நடிப்புதான் தொழில். எனவே, அதை கைவிடும் எண்ணம் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.