மாமன்னன் அவுட்! அவிநாசிக்கு வந்த சோதனை!
கடந்த கால் நூற்றாண்டுகளின் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் அவிநாசி தொகுதி, இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பற்றி...
தமிழ்நாட்டில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் அவிநாசி தொகுதி, இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுப் பத்து நாள்களைக் கடந்த நிலையில், ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தொகுதிப் பங்கீடு பேச்சுகளை முடித்துவிட்டு, அடுத்தடுத்த தேர்தல் நகர்வுகளை நோக்கி களமிறங்கியிருக்கின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக 169 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டன.
வட மாவட்டங்களிலும், டெல்டாவில் திமுகவுக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறதோ, அதைவிட கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கான செல்வாக்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் 60 தொகுதிகளில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளரே நீண்ட காலமாக வெற்றி பெற்று வரும் வரலாறு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுகவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாக அவிநாசி (தனி) தொகுதியும் இடம்பெற்றிருகின்றது.
இந்தத் தொகுதியில் 1996 ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர்த்து 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ந்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. திமுக வேட்பாளர் ஒருவர் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று கால் நூற்றாண்டை கடந்துவிட்டது. அந்த அளவுக்கு அதிமுகவின் பாரம்பரியமிக்க நீண்டநெடிய வரலாற்று வெற்றித் தொகுதிகளில் ஒன்றான அவிநாசி தொகுதியை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு தாரை வார்த்திருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவின் இரும்புக் கோட்டையாகக் கருதப்படும் அவிநாசி தொகுதியில் 1957 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அதிமுக வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனர். குறிப்பாக 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற, 9 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை அதிமுக தொடந்து வெற்றி பெற்று வருகிறது. அவிநாசி தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற தனபால், மீண்டும் 2021 தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்த தனபால், ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? என எதிர்பார்த்திருந்த நிலையில், அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, கோவை வடக்கு, உதகை, திருப்பூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வருகைக்குப் பின்னர் கொங்கு மண்டலம் அதிமுகவின் கைகளில் இருந்து நழுவி பாஜகவை நோக்கி செல்வதாகப் பார்க்கப்படுகிறது. அதன் விளைவு மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில முன்னாள் தலைவர் எல். முருகன் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், திமுகவின் ஆ. ராசாவிடம் தோல்வியடைந்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அவிநாசி தொகுதியில் பாஜகவுக்கு அதிகளவில் வாக்குகள் கிடைத்திருந்தன. இதனை மையப்படுத்தியே அந்தத் தொகுதியை பாஜக கேட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளையில், 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெறும் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். இதனால், இந்த முறை பேரவைத் தேர்தலில் கட்டாய வெற்றியைப் பெற வேண்டும் நோக்கில் பாஜகவும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான தனபால், 1977 ஆம் ஆண்டு முதல்முறையாக எம்.ஜி.ஆர். முதல்வராக தேர்வான தேர்தலிலேயே வெற்றி பெற்றி எம்.எல்.ஏ-வாக இருந்தவர்.
அதைத் தொடர்ந்து 1980,1984, 2001 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சங்ககிரி தொகுதியிலிருந்தும் 2011 ஆம் ஆண்டில் ராசிபுரம் தொகுதியிலிருந்தும், 2016 மற்றும் 2021-ல் அவிநாசி தொகுதியிலிருந்தும் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட்டியலினத்தைச் சேர்ந்தவரான தனபால், 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சங்ககிரி தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அப்போது தேர்தல் பணியாற்றும் கட்சியினருக்கு சாப்பாடுகூட தனபால் வாங்கித் தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இது அப்போதைய அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தெரியவர, போயஸ் கார்டனுக்கு அழைத்து அவரிடம் கடிந்துகொண்டிருக்கிறார். இதனையடுத்து, கட்சியினருக்கு சாப்பாடு கூட வாங்கித் தருவதில்லை என தனபாலிடம் ஜெயலலிதா கேட்டபோது, “நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன். நான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் அதிமுகவினர் யாரும் வாங்க மாட்டார்கள். அவர்கள் அதைத் தொடக்கூட இல்லை” என்றும் கூறியுள்ளார்.
இதனால், 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தனபாலை உணவுத்துறை அமைச்சராக்கி அழகுபார்த்தார். பின்னர், 2011 ஆம் ஆண்டில் பேரவைத் துணைத் தலைவராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை அவைத்தலைவராக இருந்துள்ளார் தனபால்.
74 வயதான தனபால், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவைச் சந்தித்து வரும் நிலையில், இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அவரின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நீலகிரி தேர்தலில் போட்டியிட்டு 2,20,230 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். இந்தாண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமானார்.
அதிமுக தொடங்கிய காலம் தொட்டு சங்ககிரி, ராசிபுரம், அவிநாசி என பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டிருகிறார். அதில், ராசிபுரம், அவிநாசி ஆகிய இரண்டு தொகுதிகளுமே பாஜகவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
வருகிற தேர்தலில் அவர் போட்டியிடுவாரா? என்பது அதிமுக வேட்பாளர் பட்டியலின்போதுதான் தெரிய வரும். கூட்டணிக் கட்சிகளுக்காகக் கொங்கு மண்டலத்தின் கோட்டையையே தாரை வார்க்கத் துணிந்துவிட்டாரா பழனிசாமி என்று ஒரு தரப்பினர் கொந்தளிக்கின்றனர்.
இந்தத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?