முகப்பு
தொகுதிகள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர் திமுகவுக்கு சவாலாக இருக்குமா?

Updated On : 19 மார்ச், 2026 at 6:36 AM
தொண்டாமுத்தூர்
பகிர்:

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியை தங்களுக்கு சாதகமாக மாற்ற ஆளும் கட்சி தொடர்ந்து முயற்சித்தாலும் மூன்று முறை எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியின் கோட்டையாகவே திகழ்வதாகக் கூறப்படுகிறது.

கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள தொகுதி என்பதால் இந்தத் தொகுதி, கூட்டணி கட்சிகளின் கைகளுக்குச் செல்ல வாய்ப்பு குறைவு எனலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தொகுதி. கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் தொண்டாமுத்தூர் தொகுதி மாவட்டத்தின் பெரிய தொகுதியாக இருந்தது. ஆனால் தொகுதி சீரமைப்பில் அந்த பெருமையை இழந்தது. பேரூர் தொகுதி நீக்கப்பட்டு அதிலிருந்த பல பகுதிகள் தொண்டாமுத்தூர் தொகுதியில் இணைக்கப்பட்டன. அதேநேரம், தொண்டாமுத்தூரில் இருந்த பல பகுதிகள் பிரிக்கப்பட்டு கவுண்டம்பாளையம் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள் : கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 48 முதல் 56 வரை, கோயம்புத்தூர் தெற்கு வட்டம்(பகுதி) போளுவாம்பட்டி, தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம், இக்கரை போளுவம்பட்டி கிராமங்கள், வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர்(பேரூராட்சி), தொண்டாமுத்தூர்(பேரூராட்சி), ஆலாந்துறை (பேரூராட்சி), பூலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி), குனியமுத்தூர் (பேரூராட்சி).

தொகுதியின் சமூக, தொழில் நிலவரம் : கவுண்டர் இனத்தவரை அதிகப்படியாகக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் அவர்களுக்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவர்களும், நாயுடு, ஒக்கலிக்க கவுடர்கள் உள்ளிட்டோரும் வசித்து வருகின்றனர். மாநகராட்சிப் பகுதிகள், குனியமுத்தூர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

நொய்யல் ஆறு, தொடங்கும் பகுதியில் இருந்து மாநகரை அடையும் வரை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஓடுவதால் வேளாண் தொழில் செழித்து விளங்குகிறது. தொகுதியின் பெரும்பான்மை மக்கள் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள். சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்படும் பகுதியாக உள்ளது. வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஈஷா யோக மையம், கோவை குற்றாலம், காருண்யா பல்கலைக்கழகம், நொய்யல் ஆறு போன்ற பல்வேறு முக்கிய இடங்கள் உள்ள தொகுதி.

தொண்டாமுத்தூரில் அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அடுத்தபடியாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறையும், திமுக, அதிமுக கூட்டணியில் இணைந்து மதிமுக, மார்க்சிஸ்ட், தமாகா போன்ற கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை அதிமுகவினர் தங்களுக்கு எப்போதும் சாதகமான தொகுதி என்று கருதக் கூடிய தொகுதியாக தொண்டாமுத்தூர் உள்ளது.

இதுவரை வெற்றி பெற்றவர்கள்

1951 பழனிசாமி கவுண்டர் (காங்கிரஸ்)

1962 வி.எல்லம்ம நாயுடு (காங்கிரஸ்)

1967 ஆர். மணிவாசகம் (திமுக)

1971 ஆர். மணிவாசகம் (திமுக)

1977 கே. மருதாச்சலம் (அதிமுக)

1980 சின்னராசு (அதிமுக)

1984 செ.அரங்கநாயகம் (அதிமுக)

1989 யு.கே.வெள்ளியங்கிரி (மார்க்சிஸ்ட்)

1991 செ. அரங்கநாயகம் (அதிமுக)

1996 சி.ஆர்.ராமச்சந்திரன் (திமுக)

2001 எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் (தமாகா)

2006 எம். கண்ணப்பன் (மதிமுக)

2009 (இடைத் தேர்தல்) எம்.என்.கந்தசாமி (காங்கிரஸ்)

2011 எஸ்.பி.வேலுமணி (அதிமுக)

2016 எஸ்.பி.வேலுமணி (அதிமுக)

2021 எஸ்.பி.வேலுமணி (அதிமுக

1957 இல் இத்தொகுதி சட்டப்பேரவைத் தொகுதியாக இருக்கவில்லை. 2006 இல் வெற்றி பெற்ற கண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து 2009 ஆகஸ்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக பங்கேற்காத இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.என்.கந்தசாமி வெற்றி பெற்று 2011 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

2021 தேர்தல்

எஸ்.பி.வேலுமணி (அதிமுக) - 1,24,225

கார்த்திகேய சிவசேனாதிபதி (திமுக) - 82,595

வாக்கு வித்தியாசம் - 64,041

2016 தேர்தல்

எஸ்.பி.வேலுமணி (அதிமுக) - 1,09,519

கோவை செய்யது (மமக) - 45,478

வாக்கு வித்தியாசம் - 64,041

அதிமுகவின் தொடர் வெற்றிகளை முறியடிக்கவேண்டி, வரும் தேர்தலில், திமுக, கோயம்புத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் தொண்டமுத்தூர் ஏ. ரவி என்ற உள்ளூர் வேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

தொண்டமுத்தூர் பகுதி மக்களுக்கு, மனித-விலங்கு மோதலைத் தவிர, பெரிய உள்ளூர் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிமுக எம்எல்ஏ வேலுமணி நிறைவேற்றி வருவதும், தொண்டாமுத்தூரைப் பொறுத்தவரை திமுகவில் பலம் வாய்ந்த தலைவர் உருவாகவில்லை என்பதும் ஆளுங்கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், விவசாய பணிகளுக்காக, நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிப்பது, தடுப்பணைப் பிரச்சினை, கூட்டுறவு சங்கங்கள், வருவாய் தொடர்பான சிறிய கோரிக்கைகளுக்குக் கூட இதுவரை அரசு செவிசாய்க்காமல் இருப்பதாகவும் மக்கள் குறை சொல்கிறார்கள். இதுவும் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்றே கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் வேலுமணி, தொண்டாமுத்தூரில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தாலும், தற்போது அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அவர்களது வாக்குகளைப் பெறுவது ஒரு சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

ஒருபக்கம், ஆளுங்கட்சிழனு திமுக தனது மக்கள் நலத் திட்டங்கள், வலுவான தேர்தல் பிரசாரம் மற்றும் தவெகவால் பிரிக்கப்படும் வாக்குகள் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என நம்புகிறது, இதை வேலுமணி முறியடிப்பாரா? என்பதை மே 4ஆம் தேதி அறிந்துகொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →