முகப்பு
சிறப்புச் செய்திகள் / கட்டுரைகள்

புதுவையில் மும்முனைப் போட்டி! யாருக்கு வெற்றி வாய்ப்பு?

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து...

Updated On : 25 மார்ச், 2026 at 11:46 AM
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம், தவெக தலைவர் விஜய் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்குப் பிறகு, புதுவையின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 9.44 லட்சமாகவுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 23 ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், அன்று மாலை வரை திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருந்தது. அதன் பின்னர் இறுதி செய்யப்பட்டு கையொப்பமானது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளான திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மார்ச் 23 ஆம் தேதி இறுதியானது. இதில், காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 14 தொகுதிகளும் என முடிவு செய்யப்பட்டது.

திமுகவுக்கு ஒதுக்கியதிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில், தேமுதிக 2 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.

இந்தச் சூழலில், என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி முடிவாகி அறிவிக்கப்பட்ட நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் தொடங்கிய லட்சிய ஜனநாயகக் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி செய்தது.

இதற்கு முதல்வர் என். ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து, அவரின் முடிவிலும் உறுதியாக இருந்தார். இதனால் கூட்டணி உடையும் என்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் என். ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்றும் கூறப்பட்டது.

இதனிடையே, புதுச்சேரிக்கு வந்த பாஜக மேலிடப் பார்வையாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சியை சேர்த்துக் கொள்ள முதல்வா் ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இறுதி செய்யப்பட்டது.

மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து அதிமுக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு எத்தனை என்பது இன்னும் முடிவாகவில்லை.

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த தவெக, கூட்டணிக்குள் நேயம் மக்கள் கழகத்தை சேர்த்துக்கொண்டு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

முதல்வர் ரங்கசாமி என். ஆர். காங்கிரஸ் சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான வெ. வைத்திலிங்கமும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான வெ. வைத்திலிங்கம் அவருக்கு அங்கீகார படிவத்தை வழங்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து வைத்திலிங்கம் வீட்டை நாராயணசாமியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்முனைப் போட்டி நிலவும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்று பார்க்கும்போது, எந்த ஒரு அணிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆளும் என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் ரங்கசாமியின் 5 ஆண்டுகால ஆட்சியின் ஆதரவு மற்றும் மத்திய அரசின் ஆதரவு என இவருக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனின் கட்சியான லட்சிய ஜனநாயக் கட்சியை கூட்டணிக்குள் சேர்த்ததால் கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. பாஜக எதிர்ப்பு நிலை, ரங்கசாமியின் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை உள்ளிட்டவை என். ஆர். காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் காரணிகளாக இருக்கின்றன.

கடந்த தேர்தலில் இழந்த ஆட்சியை காங்கிரஸ் - திமு.க கூட்டணி மீட்டெடுக்கப் போராடி வருகிறது.

திமுகவின் வலுவான வாக்கு வங்கி மற்றும் பூர்வாங்கமான காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை வைத்துக்கொண்டு புதுவையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் - திமுக போராடி வருகிறது.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடாதது, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உள்கட்சிப் பூசல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டியிடுவது உள்ளிட்ட காரணிகள் மதச்சார்ப்பற்ற கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணியில் ஒற்றுமை குறைந்துள்ளதால், அது தேர்தல் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரி அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால், இவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள், இதனால் மற்ற இரண்டு கூட்டணிகளின் வாக்குகளைப் பாதிக்கும். இளம் தலைமுறை வாக்காளர்கள் தவெகவுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த தேர்தல் வெற்றி நிலவரம்

கடந்த 2021 பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும், விசிக 1 தொகுதியிலும், ஏனாம் தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு அளித்தும் போட்டியிட்டன.

மேலும், தேமுதிக 26 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 22 தொகுதிகளிலும், அமமுக 20 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டன.

இதில் என். ஆர். காங்கிரஸ் 10, பாஜக 6, காங்கிரஸ் 2, திமுக 6, சுயேச்சைகள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற சுயேச்சைகளில் 5 பேர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்று, தனித்துப் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

summary

Who has the most chance of winning the Puducherry Assembly elections?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.