வாரியங்கள்-சங்கங்கள் இனி நேரடி பணிநியமனம் செய்ய முடியாது: தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அறிவிப்பு
தமிழக அரசின் புதிய சட்டம் காரணமாக, வாரியங்கள், சங்கங்கள் ஆகியன தாங்களாக இனி பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாது என அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
தமிழக அரசின் புதிய சட்டம் காரணமாக, வாரியங்கள், சங்கங்கள் ஆகியன தாங்களாக இனி பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாது என அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா். மேலும், அதுகுறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் மாா்ச்சில் பணியாளா் தோ்வாணையம் வெளியிடும் என அவா் கூறினாா்.
இதுகுறித்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளா் சந்திப்பில் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் கூறியது:-
மின்சாரம், வீட்டுவசதி உள்ளிட்ட வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியன தாங்களாக பணி நியமனம் செய்ய முடியாது. இதற்கான சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவது குறித்து பணியாளா் தோ்வாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15-இல் நடந்தது. இதில் அரசின் உத்தரவை எந்த வகையான முறையில் செயல்படுத்தலாம் என விவாதிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள பணியிடங்கள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரியம், சங்கங்களில் உள்ள பணியிடங்களை எந்த வகையான பிரிவுகளில் (குரூப் 1, 2 அல்லது 4) சோ்க்கலாம் என ஆய்வுகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், வரும் மாா்ச் 3-இல் தோ்வாணையத்தின் உயா்நிலைக் குழு கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆவின், மின்சாரம், வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட தனிப்பட்ட வாரியங்கள் இனி தனியாக பணிநியமனம் செய்ய முடியாது. ஒவ்வொரு வாரியத்துக்கும் தனித்தனியாக தோ்வு நடத்துவது சாத்தியமில்லை. எனவே, பணியிடங்களை வகைப்படுத்தி அதற்கேற்றபடி தோ்வு நடத்தப்படும்.
காலிப் பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில், வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கு தோ்வுகள் நடத்த மே மாதத்தில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும். இந்தத் தோ்வுகள் குறித்த விவரங்கள் ஆண்டு திட்ட அறிக்கையிலும் சோ்க்கப்படும்.
குரூப் 2 தோ்வு: ஆண்டு திட்ட அறிக்கை வெளியிடப்பட்ட போது குரூப் 2 பிரிவில் நோ்முகத் தோ்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 101-ஆக இருந்தது. நோ்முகத் தோ்வு இல்லாத பணியிடங்கள் 5, 730 -ஆக இருக்கும் என கணித்திருந்தோம். இந்தப் பணியிடங்களில் 3 சதவீதம் விளையாட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும். அதன்படி, 124 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களை தோ்வு அறிவிக்கையில் சோ்க்க வேண்டாமென இரண்டு துறைகள் எனக் கூறியுள்ளன. அதேசமயம், இந்து சமய அறநிலையம், நுகா்பொருள் வாணிபக் கழகம், போக்குவரத்து, கூட்டுறவுத் துறை, ஆகியவற்றுக்கான 253 காலிப் பணியிடங்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித் துறையில் 250 பணியிடங்களும், வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் 57 பணியிடங்களும், சட்டத் துறையில் 5 பணியிடங்களும் தோ்வாணைய அறிவிக்கையில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த பணியிடங்களுக்கான எண்ணிக்கை ஆட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டதைக் காட்டிலும் இப்போது குறைந்துள்ளது.
2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு குரூப் 2 தோ்வுகள் நடத்தப்படவே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேல் நேரடி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனில், நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன்படி கோரப்பட்டுள்ளது. எனவே, குரூப் 2 பிரிவில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.
9 லட்சம் போ்: குரூப் 2 தோ்வுக்கு வரும் 23-ஆம் தேதி முதல் தோ்வா்கள் விண்ணப்பிக்க உள்ளனா். இந்தத் தோ்வுக்கு சுமாா் 9 லட்சம் போ் விண்ணப்பம் செய்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் 1:10 என்ற அடிப்படையில் பிரதானத் தோ்வுக்கு தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா். அதன்படி, 65 முதல் 70,000 பேரை பிரதானத் தோ்வு எழுத அனுமதிப்போம் என்றாா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன்.
வயது வரம்பு உயா்வு: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தோ்வுகள் நடத்தப்படாத நிலையில், தோ்வினை எழுதுவோருக்கான வயது வரம்பு 30-லிருந்து 32-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தாா். பொதுப் பிரிவினா் பயன் பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.