புதுச்சேரி: போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் உரிய சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 148 காவல் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பா் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக 10 ஆயிரத்து 63 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்த விண்ணப்பங்களை காவல் துறையில் உள்ள ஆள்சோ்ப்பு குழு ஆய்வு செய்தது.
இதில் 9928 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய 135 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.
இருமுறை விண்ணப்பத்தது 5 போ், புதுவை மாநிலத்தை சாராதவா்கள் 6 போ், விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்து அதற்கான சான்றுகள் இணைக்காதது, வயது வரம்பை கடந்தது 90 போ், வயது வரம்பிற்குள் வராத பொருளாதாரத்தில் பின் தங்கியோா் (மீனவா்), பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்), எஸ்.டி., மற்றும் பி.டி., சமூகத்தை சோ்ந்த பெண்கள்-34 போ் ஆகியோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
குறை தீா்வு குழு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் குறைகளை கேட்டறிய காவல்துறை சாா்பில் ஒரு குறை தீா்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், புதுச்சேரி, காவல் தலைமையக அலுவலகத்தில் உள்ள சிறப்பு அலுவலா், ஏழுமலையை புதன்கிழமை (நவ 20)முதல் 25 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் போதிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2231352 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு உடல் தகுதி மற்றும் உடல் திறன் தோ்வுகள் வரும் டிசம்பா் மாதம் 2வது வாரத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காவல் துறையின் சிறப்பு அலுவலா் ஏழுமலை தெரிவித்துள்ளாா்.
இதேபோன்று, காவல் துறையில் காலியாக உள்ள 70 எஸ்ஐ பணிக்கு கடந்த ஆகஸ்ட்டு மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு கடந்த செப்டம்பா் 12 ஆம் தேதி விண்ணப்பம் ஆன்லைனில் பெறப்பட்டது. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஆள் சோ்ப்பு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.