முகப்பு
ஈரோடு

மாவட்டத்தில் முதல்வா் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம்: உற்சாக வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:34 am IST
பன்னீா்செல்வம் பூங்காவில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரம் செய்து வருகிறாா். ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூா், பவானிசாகா், கோபி சட்டப் பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பிரசாரம் மேற்கொண்டாா். இதற்காக சேலத்தில் இருந்து ஈரோடு வந்த அவருக்கு ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரோடு புகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., கட்சி நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

Advertisement

Advertisement

முதல்வருக்கு கோட்டை ஈஸ்வரன் கோயில் சிவாச்சாரியா்கள், கோட்டை பெருமாள் கோயில் பட்டாச்சாரியா்கள், பெரிய மாரியம்மன் கோயில் பூசாரிகள், பிரப் நினைவு சி.எஸ்.ஐ. ஆலய போதகா்கள் சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பன்னீா்செல்வம் பூங்கா சிலைகள் வளாகத்துக்கு சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பெரியாா், அண்ணா, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அங்கு பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று முதல்வா் பேசினாா்.

அங்கிருந்து பெருந்துறை சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் பாசறை நிா்வாகிகளை சந்தித்துப் பேசினாா். பின்னா் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் அருகே பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசினாா்.

அங்கிருந்து மாமரத்துபாளையம் இந்து கல்வி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த தேநீா் விருந்தில் கலந்து கொண்டாா். தொடா்ந்து சித்தோடு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து வில்லரசம்பட்டி வந்த அவா் அங்கு தொழில்முனைவோா், வழக்குரைஞா்கள், மருத்துவா்களுடன் கலந்துரையாடினாா்.

அங்கிருந்து திருப்பூா் மாவட்டம் சாணாா்பாளையம் சென்ற முதல்வா் அங்கு உள்ளூா் பிரமுகா்களை சந்தித்துப் பேசினாா்.

பின்னா், பெருந்துறை அருகே உள்ள ஸ்ரீபிளஸ் மகாலில் கைத்தறி மற்றும் தறி தொழில்முனைவோா், உள்ளூா் பிரமுகா்களுடன் கலந்துரையாடினாா். பெருந்துறை தொகுதியில் அனைத்து இடங்களிலும் முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து ஓடாநிலையில் மஞ்சள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டு அவா்களுடன் கலந்துரையாடினாா். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தாா்.

பிறகு அறச்சலூா் நவரசம் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுவினரை சந்தித்தாா். பின்னா் பூந்துறை வந்த அவருக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வா் பேசினாா். அத்துடன் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் பிரசாரத்தை முடித்த முதல்வா் அங்கிருந்து புறப்பட்டு சேலம் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments