17.4.1976: அம்பத்தூரில் ரூ. 2.55 கோடி செலவில் பால் பண்ணை - ராஷ்டிரபதி துவக்கி வைத்தார்
அம்பத்தூரில் பால் பண்ணையை ராஷ்டிரபதி துவக்கி வைத்தது பற்றி...
சென்னை, ஏப். 16- ரூ. 2.55 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய பால் பதனிடும் நிலையம் ஒன்றை அம்பத்தூரில் ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகமது இன்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு பால்வள நிறுவனத்தின் சார்பில், மாதவரம் பால் பண்ணையோடு, இது இரண்டாவதாக அமைக்கப்பட்ட நிலையமாகும்.
இந்த நிலையம் தினமும் 2 லட்சம் லிட்டர் பாலைப் பதனிடும் திறன் கொண்டது. மாதவரத்தில் உள்ள நிலையம் இப்போது தினமும் 1.60 லட்சம் லிட்டர் பாலை பதனிட்டு வழங்கி வருகிறது.
Advertisement
Advertisement
உலக உணவுத் திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதற்கும் 1970-77-க்கு மொத்தம் அளிக்கப்பட்ட 100 கோடி ரூபாயில் ரூ. 8.87 கோடி தமிழ் நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக்கொண்டு தமிழ்நாட்டில் பால்வள பெருக்கிற்குப் பயன்படுத்தப்பட்டு, இந்த இரண்டாவது நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரபதி இவ்விழாவில் பேசுகையில், புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நிலையத்தின் மூலம், பால் பெருக்குத் துறையில், மற்ற மாநிலங்களோடு தமிழ் நாடும் சேர்ந்து முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார். தமிழ் நாட்டில் இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கிற செயல்திறன் மூலம், பால் வளத்தைப்பெருக்க துடிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் பால் உற்பத்தி மேலும் பெருகி கிராமப்புற ஏழை மக்களின் வருமானம் அதிகரிக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பால்வள நிர்வாகிகள், பால் பெருக்குக்கு தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்; விஞ்ஞானத்துறையில் நவீன தொழில் நுணுக்கம், விஞ்ஞான முன்னேற்றம் ஆகிய பயன்கள் கிராமங்களில் பால் உற்பத்தியாளருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ...
மசூதியில் ராஷ்டிரபதி பிரார்த்தனை
சென்னை, ஏப். 16- திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள பெரிய மசூதியில் ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகமது இன்று பிற்பகல் பிரார்த்தனை செய்தார்.
ஆற்காடு இளவரசர் ஹாஜி குலாம் முகமது காதர், ஆற்காடு இளவரசின் ஏஜண்டு அஹமது மொஹினுதீன் ஆகியோர் மசூதி நுழைவாயிலில் ராஷ்டிரபதியை வரவேற்றனர். மசூதி இமாம் ஹாஜி ஹபிஸ் நிஜாமுதீன் தொழுகையை நடத்தி வைத்தார். பிரார்த்தனை சுமார் 30 நிமிட நேரம் நீடித்தது.
பிரார்த்தனையில் சுமார் 2 ஆயிரம் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மசூதிக்குள் பலத்த பந்தோபஸ்து ஏற்பாடுகளைப் போலீஸார் செய்திருந்தனர்.
பாங்குகளை சீரமைக்க மத்திய அரசு யோசனை
ஹைதராபாத், ஏப்.16- அரசாங்க உடமையாக்கப்பட்ட பாங்குகள் செயல்படும் முறையைப் பற்றி ஆராய்ந்து, அமைப்பில் மாறுதல் செய்வதற்கான பரிந்துரைகளைக் கூறுவதற்கு மத்திய அரசாங்கம் கமிஷன் ஒன்றை விரைவில் அமைக்கும என்று யூனியன் வருவாய், பாங்குத் துறை மந்திரி பிரணவ குமார் முக்கர்ஜி இன்று இங்கு அறிவித்தார்.
பாங்குத் தொழில் சீரமைப்புக்கான பரிந்துரைகளை இக்கமிஷன் செய்யுமென்றார். பாங்கர்கள், பொருளாதார நிபுணர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசினார்.
1972-லேயே பாங்குகள் கமிஷன், அரசாங்க உடமையாக்கப்பட்ட பாங்குகள் செயல்படும் விதத்தைக் குறித்து அனுபவம் ஏற்பட்ட பிறகு, பாங்குகள் அமைப்பு பற்றி புது பரிசீலனை செய்யவேண்டுமென்று சிபார்சு செய்திருந்ததை பிரணவகுமார் முக்கர்ஜி நினைப்பூட்டினார்.
உத்தேசக் கமிஷன், பாங்கு நிறுவனங்களின் நடைமுறைகளை எளிதாக இயங்குவிதத்தில் அமைப்பதிலும், ஒழுங்குப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று கூறினார். கமிஷனின் பரிசீலனைக்கு விட வேண்டிய பல்வேறு விஷயங்களைப் பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருகிறதென்றும் கூறினார். கமிஷன் நியமனம் பற்றி விரைவில் பார்லிமெண்டில் அறிவிக்கப்படும் என்றார். ...
Dairy Farm in Ambattur at a Cost of Rs. 2.55 Crores — Inaugurated by the President
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.