டாக்டர் எஸ். அருள்ராஜ், தலைவர் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர், சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, தூத்துக்குடி
வித்தியாசமான தலைப்பாக இருக்கிறது என நினைக்கிறீர்களா? தலைப்பின் நோக்கம் என்னவென்றால் நமது வாழ்க்கை முறை மாற்றங்களினால் மாரடைப்பைத் தவிர்க்கலாம் அல்லது ஒத்திப் போடலாம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்பதே நோக்கமாகும். மாரடைப்பே நலமா என்று இந்திய மக்கள் கேட்கும் நாள் வர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் இளம் வயதினருக்குக்கூட மாரடைப்பு வருகிறது. ஜங் புட் எனப்படும் பீட்சா, பர்கர் போன்ற உணவுகள், குறைந்த உடல் உழைப்பு, புகைப்பிடித்தல், அதிக அளவு மது அருந்துதல் ஆகியவற்றால் மாரடைப்பு ஒரு சாதாரணமான உயிர்க்கொல்லி நோயாகிவிட்டது.
தற்போது நாளுக்கு நாள் புதிய மருத்துவ முறைகள் வந்து கொண்டிருக்கின்றன. நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, நவீன ஆஞ்சியோ பிளாஸ்ட்டி மற்றும் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அடைப்பின் அறிகுறி: நெஞ்சுவலி என்பது நடுநெஞ்சில் ஏற்படக்கூடிய ஒருவகை அழுத்தம் ஆகும். இது இதயத் தசைகளில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அறிகுறி ஆகும். நெஞ்சில் வலி ஏற்படும்போது, அதை மாரடைப்பு ஏற்படுவதற்கு உரிய முக்கிய அறிகுறியாகக் கருத வேண்டும். வாயு பிரச்னை என அலட்சியமாக இருக்கக் கூடாது.
நெஞ்சுவலி மார்பின் நடுவில் அழுத்தம் போன்று வலி ஏற்படும். அங்கிருந்து தோள்பட்டை, கழுத்து, தாடை, இடது கை, வலது கை, முதுகுக்கு வலி பரவலாம். அதிக வலியின் போது வியர்வை, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படும்.
ஆஸ்பிரின் உதவும்: நெஞ்சுவலி ஏற்பட்டால் நடந்து செல்லாமல் ஆட்டோ அல்லது ஆம்புலன்ஸ் மூலம் இசிஜி வசதியுள்ள மருத்துவரிடம் உயிர்காக்கும் பொன்னான முதல் ஒரு மணி நேரத்திற்குள் (Golden hour) உடனடியாக சென்று விட வேண்டும்.
ஆஸ்பிரின் மாத்திரை இருந்தால், 300 கிராம் மாத்திரையைப் பொடி செய்து, நீரில் கலந்து மாரடைப்பு ஏற்பட்டவரை குடிக்கச் செய்யலாம்.
மாரடைப்பு என்றால் என்ன? இதயம் எப்போதும் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் உயிர் இருக்கும். இதயத் தசை வேலை செய்ய குறிப்பிட்ட அளவு ரத்தம் தேவைப்படும். இதயத்தில் உள்ள மூன்று கரோனரி ரத்தக் குழாய்களின் வழியாக இதயத் தசைக்கு ரத்தம் செல்கிறது. கரோனரி ரத்தக் குழாய்களில் தடை ஏற்பட்டாலோ, சுருங்கிவிட்டாலோ ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்துவிடும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத்துக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
பொன்னான நேரம்: ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் நிலையில், முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமான நேரமாகும். அதாவது மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிரைக் காக்க, மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் த்ராம்போஸிஸ் மருந்துகளை ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தி, ரத்த உறைவைத் தடுத்து, ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி, ரத்தம் செல்வதற்கு ஏற்பட்டிருந்த தடையை நீக்குவது மிக முக்கியமானதாகும். ஆஞ்சியோபிளாஸ்ட்டி அல்லது ஸ்டென்ட்டுகள் பொருத்தியும் தடையை நீக்கலாம்.
இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை: மருந்துகள், ஆஞ்சியோ பிளாஸ்ட்டி உள்ளிட்ட சிகிச்சைகள் மூலம் இதய கரோனரி ரத்தக் குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்க முடியாவிட்டால், அவசர இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்.
இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்குவது எப்படி? ஆஞ்சியோகிராம் வசதியுள்ள மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாயின் தன்மை, அடைப்புகளின் அளவு ஆகியவற்றை 30 நிமிஷங்களில் கண்டறிந்து விடலாம். அடைப்பின் தன்மை, அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடம், பாதித்த ரத்த குழாய் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஆஞ்சிபோபிளாஸ்ட்டி செய்து அடைப்பை அகற்றி ஸ்டென்ட் பொருத்தலாம். அடைப்பின் அளவு அதிகமாக இருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி, அவசர பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில் அடைப்பை அகற்றினால்தான் நோயாளியைக் காப்பாற்ற முடியும்.
ரத்தம் மிகவும் முக்கியம்: உடல் முழுவதற்கும் உயிரோடு இருப்பதற்கும் ரத்தம் அவசியம். அந்த ரத்தத்தை உடல் முழுவதுக்கும் விநியோகம் செய்யும் பம்ப் இதயம் ஆகும். இதயம் இயங்குவதற்கும் ரத்தம் அவசியம். ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் ஒரு பகுதி சேதமடைந்து உயிரிழந்து விடுகிறது.
இதய ரத்த நாளங்களில் நிரந்தரமாக அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது 30 நிமிஷங்கள் முதல் 2 மணி நேரம் வரை அடைப்பு நீடித்தாலோ மாரடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டுள்ள ரத்த நாளங்கள் இதயத்தின் எந்தப் பகுதியில் உள்ளதோ, அந்தப் பகுதியில் உள்ள இதயத் தசைகள், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச் சத்தின்றி இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத அளவு சேதமடைகின்றன. அதிக அளவு சேதமும் அல்லது அதிக அளவு காலம் தாழ்த்தினாலோ இதயத்தின் துடிப்பு நின்று விடுகிறது.
இதயம் விரிந்து ஹார்ட் ஃபெய்லியர் (இதயத் தசை முற்றிலும் வலுவிழந்து ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலை) ஏற்படலாம். எனவே மாரடைப்புக்கு உடனடியாக அவசர சிகிச்சை அவசியம்.
மாரடைப்பைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன? மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு நமது பங்கு மிகவும் அவசியம். உணவின் அளவைக் குறைக்க வேண்டும. 2 இட்லி, தோசை, சப்பாத்தி சிறிது அரிசி சாதம், அதிக அளவு காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். அதிக கொழுப்புள்ள முட்டையின் மஞ்சள் கரு, விலங்குகளின் புரதம் அடங்கிய கறிகள், பெரிய கொழுத்த மீன்கள், ஈரல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக கலோரி கொண்ட பரோட்டா, பீட்சா, பர்கர், பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நடைப் பயிற்சி உதவும்: ஆரோக்கிய வாழ்வுக்கு உடல் அசைவு அவசியம். இருந்த இடத்தில் இருந்தே வேலை பார்ப்பது, நீண்ட நேரம் தொலைக்காட்சி, கணினி பார்ப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் தரும் விஷயங்களாகும். தினமும் சாப்பிடுவதற்கு முன் 45 நிமிஷம் விறுவிறுவென்று வேகமாக நடப்பது நல்லது. மாடிகளில் ஏறி இறங்க படிகளை உபயோகிப்பது நல்லது.
நமது வாகனங்களை விடுமுறை நாள்களில் நாமே கழுவி சுத்தம் செய்யலாம். செடிகளுக்கு நாமே தண்ணீர் ஊற்றலாம். புகைப் பழக்கம், மது அருந்துவதை நிரந்தரமாக விட்டு விட வேண்டும்.
புகை, மது, கொழுப்புள்ள உணவு ஆகிய மூன்றும் மாரடைப்பின் நண்பர்கள். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்புச் சத்து இருந்தால் மருத்துவ ரீதியாக அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மன நிம்மதி, அமைதி மிகவும் முக்கியம். யோகா, தியானம் ஆகியவை மன அழுத்தத்தை நீக்கி ஆயுளை அதிகரிக்கிறது.
30 வயதான அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம்.
நெஞ்சு வலி ஏற்பட்டால், உயிர் காக்கும் பொன்னான முதல் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை அழைத்துச் செல்வது அவசியம்.
நமக்கு ஒரு வாழ்க்கைதான்
நமக்கு ஒரு இதயம்தான்
இதயம் நமக்காகத்தான்
இதயத்தைப் பாதுகாப்போம்
இனிமையாக வாழ்வோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.