தங்களது லட்சியங்களை நோக்கி மிக உற்சாகத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறையினரை உலுக்கும் வகையில் அண்மைக் காலமாக 30, 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற செய்திகளைப் படிக்கும் யார் ஒருவருக்கும். பயமும் தொற்றிக்கொள்ளத்தான் செய்யும். இவர்களுக்கு வராது, இவர்களுக்குத்தான் வரும் என்று எதையும் சொல்ல முடியாத அளவுக்கு அண்மைக் காலமாக நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. உடற்பயிற்சிக் கூடங்களில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதே சிலர் சுருண்டு விழுந்து பலியாகியிருக்கிறார்கள்.
சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தவர்களும் மதுப் பழக்கம் உள்ளவர்களும்கூட நீண்ட காலம் வாழும் நிலையில், நல்ல சுகாதார முறையைக் கடைப்பிடிப்பவர்கள் திடீரென மாரடைப்பால் மரணம் அடையும்போது இதுவரை சொல்லி வந்த கூற்றுகள் எல்லாம் பொய்யாய் போனது போல ஒரு மாயத் தோற்றம்.
இந்த நிலையில்தான், மாரடைப்பிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தவர்கள், கற்றுக் கொண்ட பாடம் என்ன என்று கூறியிருக்கிறார்கள். அதிலிருந்து சில..
1. ஒரு முறை நெஞ்சுவலி வந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று இசிஜி எடுத்துப் பார்த்துவிட்டு அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொன்னால் அதை நம்ப வேண்டாம்.
2. நெஞ்சு வலி வந்து, மாரடைப்போ என்ற அச்சம் ஏற்பட்டால், உடனடியாக சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை செய்யாமல் இருக்கலாம். நிலைமை மோசமடைவதைத் தடுக்கும்.
3. மாரடைப்பு வந்து சிலருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்டன்ட் வைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கட்டாயம் கெட்டப் பழக்க வழக்கங்களை கைவிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் இதயம் கைவிட்டுவிடும்.
4. மாரடைப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தவறினாலும், உடனிருப்பவர்கள் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. சிலருக்கு நெஞ்சு வலிகள் எதுவும் இல்லாமல், இடது கை வலியுடன்தான் மாரடைப்பு அறிகுறி காட்டுகிறது. எனவே அதனை அலட்சியம் செய்ய வேண்டாம்.
6. முதலில் இடது கையில் தொடங்கும் வலி படிப்படியாக நெஞ்சுப் பகுதி மற்றும் தோள் பட்டை முழுக்க பரவுகிறது.
7. விற்பனை பிரதிநிதிகள் போன்று வேலைகளில் நாள்தோறும் இலக்குகளோடு பணியாற்றுபவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகமாக உள்ளதால், எப்போதும் பதற்றம், பரபரப்பு என ஓடிக்கொண்டிருக்க வேண்டாம், அமைதியான வாழ்முறைக்கு வழிவகுக்க வேண்டும் என்கிறார்கள்.
8. ஜங்க் உணவுகள், சிகரெட், மதுப் பழக்கம் இருப்பதால் நெஞ்சு வலிக்கிறது என நினைக்க வேண்டாம். இவ்வளவுக் கெட்டப் பழக்கம் இருந்தால் மாரடைப்பு ஏன் வராது என்று தெளிவு பெறுவது அவசியம்.
9. பல ஆண்டுகளாக உடலைக் கெடுத்துக் கொண்டு, சந்தோஷமாக வாழ்வதாக எண்ணுகிறோம். ஆனால், ஒரே நாளில் மாரடைப்பு என்ற சொல் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது என்கிறார்கள் அதிலிருந்து மீண்டவர்கள்.
10. ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டால், அவர்கள் நோயிலிருந்து மீண்டாலும் அவர்கள் பணியாற்றும் இடங்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாததால், உயிர் பிழைத்தாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பலர் கவலையடைகிறார்கள்.
11. ஒருமுறை மாரடைப்பு வந்துவிட்டால், உடனே மீண்டும் மாரடைப்பு ஏற்படும் என்ற அச்சத்திலிருந்து விடுபட வேண்டும். மீண்டும் வராமல் இருப்பதற்கான வழிகளைத்தான் கையாள வேண்டும்.
12. நோய் வந்த பிறகு சத்தான உணவுகளை சாப்பிடுவதை விட, நோய் வருவதற்கு முன்பே சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.