செய்திகள்

தினமும் 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர்: அமைச்சர் தகவல்

DIN

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பேசியது:
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும் 1,491 மருத்துவ நிலையங்கள் மற்றும் 28 மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. 
இதுதவிர, 2 ஆயிரம் கிலோ நிலவேம்பு பொடி டாம்ப்கால் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
50 ஆயிரம் பேருக்கு இலக்கு: சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, பாண்டிபஜார், மெரீனா கடற்கரை, தியாகராயநகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 35 வாகனங்களில், சித்த மருத்துவர்கள் உதவியாளர்களுடன் நேரில் சென்று நிலவேம்பு குடிநீர் விநியோகிக்க உள்ளனர். 
இந்த வாகனங்கள் மூலம் சென்னையில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கூடுதல் நிதி ஒதுக்கீடு: கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு ரூ.13.95 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனைக்கு ரூ.23 கோடி மதிப்பில் 837 ரத்தப் பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் 10 மாடி உயரம் வரை புகை செல்லக்கூடிய கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT