பண்டாரா பாலியல் பலாத்கார வழக்கு: ஷிண்டே z பேச்சால் சர்ச்சை
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்களை மத்திய உள்துறை
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மாநிலங்களவையில் கவனக்குறைவாக வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, தான் கூறியதை வாபஸ் பெறுவதாக ஷிண்டே தெரிவித்தார். உடனே, சிறுமிகளின் பெயர்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஷிண்டே மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை வாசித்தார். அப்போது, சிறுமிகளின் பெயர்களை அவர் தெரிவித்தார்.
Advertisement
உடனே குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, சட்டப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது. அதிலும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள். இந்நிலையில் கவனக்குறைவு காரணமாக உள்துறை அமைச்சரின் அறிக்கையில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என கருதுகிறேன். ஷிண்டே தனது அறிக்கையை வாபஸ் பெற வேண்டும். புதிய அறிக்கையை அவையில் தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.
அப்போதும், ஜேட்லி என்ன கூறுகிறார் என்பதை ஷிண்டேவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது பேசிய அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ""ஜேட்லி மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். சட்டப்படி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிடக் கூடாது. அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடுகிறேன். மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட சிறுமிகளின் பெயர்களை பத்திரிகைகள் வெளியிட்டால், உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்படும்'' என்றார்.
விசாரணைக்கு உத்தரவு: பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஷிண்டே கூறியதாவது:சிறுமிகளின் பெயர்கள் அறிக்கையில் இடம்பெற்றது குறித்து உள்துறை அமைச்சகத்தில் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.
சமீபத்தில்தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை ஹிந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதாக பேசி ஷிண்டே சர்ச்சையில் சிக்கினார். பின்னர், அதற்காக வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மீண்டும் கவனக்குறைவாக பேசி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் ஷிண்டே.
சி.பி.ஐ. விசாரணைக்கு மறுப்பு: இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாக பேசிய சுஷீல் குமார் ஷிண்டே, ""மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடாது'' என்றார்.
உள்துறை அமைச்சகத்தின் மெத்தனம்
மாநிலங்களவையில் 3 சிறுமிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட அறிக்கையை ஷிண்டே வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அவற்றை அவைக் குறிப்பிலிருந்து துணைத் தலைவர் பி.ஜே.குரியன் நீக்கிவிட்டார்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு மணிநேரத்துக்குப் பின், ஊடகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஷிண்டேவின் அறிக்கையில் சிறுமிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அந்த அறிக்கையின் விவரங்கள், மத்திய அரசின் செய்தித் துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மாநிலங்களவையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும், அந்த அறிக்கையை உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது. புதிய அறிக்கையை அனுப்பி வைத்தது.
கவனக்குறைவு காரணமாக சிறுமிகளின் பெயர்களைத் தெரிவித்துவிட்டேன். அதை சுட்டிக்காட்டிய அருண் ஜேட்லிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் பெயர்களை வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்
சிறுமிகளின் பெயர்களை ஷிண்டே வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு போதிய மரியாதை தருவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
- மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி