முகப்பு
இந்தியா

இளைஞர்களின் மனதில் சமூக நெறிகளை புகுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் மனதில் சமூக நெறிகளைப் புகுத்த வேண்டுமென குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூன் 2013, 11:01 pm IST
பகிர்:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் மனதில் சமூக நெறிகளைப் புகுத்த வேண்டுமென குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற தயானந்த் கல்வி அமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பெண்களுக்கு எதிராக சமீபத்தில் ஏற்பட்ட குற்றங்கள் நம்மை மிகவும் பாதித்தது.

Advertisement

Advertisement

இது குறித்து மக்கள் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளனர். நமது முன்னோர்களிடம் இருந்து கற்ற முதியோர்கள் மற்றும் பெண்களுக்கு மதிப்பு அளிக்கும் பண்பாடு, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை மறந்து விட்டோம். அதனால்தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மனதில் நன்னெறிகளைப் புகுத்த வேண்டும். இதனை செய்தாலே போதும்; குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை ஏற்படுத்தத் தேவையில்லை.

பெண்களின் விடுதலைக்கு கல்வி முக்கியக் கருவியாக உள்ளது. தரமான கல்வியை அளிக்கும் வகையில் கற்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.

உலகின் 200 சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தரமான கல்வியை அளிக்க கல்வியாளர்கள் முன்வர வேண்டும்.

முந்தைய காலங்களில் நாளந்தா, தட்சசீலம் உள்ளிட்ட தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன.

புதிய கண்டுபிடிப்புகளுக்கும், கல்வித்துறையிலும் முதலீடு செய்ய தனியார் துறையினர் முன்வர வேண்டும்.

நாட்டில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இல்லாததால், பல மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். சர்வதேச புள்ளிவிவரப்படி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் 100 நிறுவனங்களில் 3 மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவை.

பண வசதியின்மை அல்லது கற்கும் சூழல் ஏற்புடையதாக அமையாதது ஆகிய காரணங்களால் திறமை வாய்ந்த மாணவர்கள் பலருக்கு உயர்கல்வி கிடைக்காமல் போகிறது.

அனைவரும் கல்வி பயில அனைத்துப் பகுதிகளிலும் கல்விக்கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் கே. சங்கரநாராயணன், லத்தூரைச் சேர்ந்தவரான பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் வி.பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.