காவிரி: தமிழக மனு மீது 12-ல் விசாரணை
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க மத்திய
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மேலும், தமிழக அரசின் மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியும் உத்தரவிட்டது.
ஒன்றரை மாத கோடை விடுமுறைக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கூடியது. இதையடுத்து, தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தமிழக அரசின் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் காவிரி விவகாரம் தொடர்பாக முன்வைத்த கோரிக்கை:
Advertisement
"கடந்த மாதம் காவிரி மேற்பார்வைக் குழு இரண்டு முறை கூடியது. இருந்தபோதும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அந்தக் கூட்டங்களில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார்.
இதற்கு கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் எதிர்ப்புத் தெரிவித்தார். "ஏற்கெனவே நடைபெற்று வரும் காவிரி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு வேறு நீதிபதிகள் இடம்பெற்ற அமர்வு ஒத்திவைத்துள்ளது' என்று அவர் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது ஜூலை 12-ஆம் தேதி விசாரணை நடைபெறும். அந்த மனுவுக்கு பதில் அளிக்க கர்நாடகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
பின்னணி: 2007-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆனால், தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறைக் குழுவையும் மத்திய அரசு அமைக்கவில்லை. இதையடுத்து, அந்த அமைப்புகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தை கேட்டிருப்பதாக மத்திய அரசு கூறியது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த தாற்காலிகக் குழுவை ஏற்படுத்தலாம் என்று கர்நாடக அரசு யோசனை தெரிவித்தது.
அதை ஏற்ற நீதிமன்றம், தாற்காலிகமாக மேற்பார்வைக் குழுவை கடந்த மே 10-ஆம் தேதி நியமித்து வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து, மத்திய நீர் வளத் துறைச் செயலர் தலைமையில் கடந்த ஜூன் மாதத்தில் இரு முறை மேற்பார்வைக் குழு கூடியது. ஆனால், தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என கர்நாடகம் கூறியது. இதனால், எந்த முடிவும் எடுக்காமல் குழுவின் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து "காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியாக நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்; காவிரியில் இருந்து ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 10 டிஎம்சி நீரையும் கடந்த ஆண்டு வழங்க வேண்டிய 53.18 டிஎம்சி நிலுவை நீரையும் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஜூன் 25-ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.