முகப்பு
இந்தியா

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு எந்த வழிமுறை அடிப்படையில் நடந்தது என்பதை விளக்கிட அதற்குரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 12 ஜூலை 2013, 3:56 am IST
பகிர்:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு எந்த வழிமுறை அடிப்படையில் நடந்தது என்பதை விளக்கிட அதற்குரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நடந்துவரும் விசாரணை பற்றி சிபிஐ தாக்கல்செய்த நிலவர அறிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்சொன்ன உத்தரவை பிறப்பித்தது.

சீலிட்ட கவரில் நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. ஒதுக்கீடு செய்யப்பட்ட 164 நிலக்கரி வயல்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாததால் விசாரணையில் சிக்கலை சந்தித்துள்ளது சிபிஐ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு இந்த அறிக்கையை ஆய்வுசெய்து கருத்து தெரிவித்தது.

Advertisement

Advertisement

"நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை. சுரங்க ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய எவ்வித முறையையும் பின்பற்றவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவும் சரியாக செயல்படவில்லை.

எந்தஒரு விவரமும் ஆவணங்களில் இல்லை. ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை சிபிஐயால் முழுமையாகப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.

அடிப்படை ஆவணங்கள் இல்லாமல் இந்தியா இருப்பதை இது காட்டுகிறது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சிபிஐக்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன' என்று லோதா தெரிவித்தார்.

164 சுரங்கங்களை ஒதுக்கீடு செய்த விவரங்கள் அடங்கிய முழுமையான பிரமாண பத்திரத்தை நான்கு வாரங்களுக்குள் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் விசாரணைக்கு அரசின் அனுமதி ஏன் தேவை என்பது உள்ளிட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதிக்கு உத்தரவிட்டது அமர்வு.

மேலும், சுரங்க வயல்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வுக் குழு நடத்திய 36 கூட்டங்களில் நடைபெற்ற ஆலோசனைகள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சமூக நோக்கோடு பதில் தெரிவிப்பது அவசியம்.

இந்த வழக்கில் வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா கடந்த 2012, செப்டம்பர் 14-ஆம் தேதி 6 கேள்விக்கு பதில் அளிக்க கோரி மனுத் தாக்கல் செய்தார். இதற்கு இதுவரை பதில் கிடைக்கல்லை. இது மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை பகிர்ந்துகொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக கடந்த மே 8-ஆம் தேதி நீதிமன்றம் தெரிவித்த உத்தரவில் மாற்றம் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீதும், 33 பேர் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பான மனு மீதும் ஜூலை 17-ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அந்த அமர்வு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.