முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் மறு சீரமைப்புக்கு ரூ.50 கோடி: 101 கிராமங்களைத் தத்தெடுக்கிறது மாதா அமிர்தானந்தமயி மடம்

நாடு முழுவதும் 101 கிராமங்களைத் தத்தெடுக்கப் போவதாக மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவித்துள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 1:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

நாடு முழுவதும் 101 கிராமங்களைத் தத்தெடுக்கப் போவதாக மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவித்துள்ளது.

இதை மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணைத் தலைவர் சுவாமி அமிர்த ஸ்வரூபானந்தா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

இத்திட்டம் மூலம் அந்தக் கிராமங்களைத் தன்னிறைவு பெற வைப்பதே எங்கள் நோக்கமாகும். தவிர, உத்தரகண்டில் பெருவெள்ளத்தால் முற்றிலும் சேதமடைந்த 500 வீடுகளை, எங்கள் மடம் கட்டிக் கொடுக்க உள்ளது. ருத்ரபிரயாகை மற்றும் உத்தரகாசி மாவட்டங்களில் உள்ள 42 கிராமங்களில் இந்த வீடுகள் கட்டித் தரப்படும். அந்த மாநிலத்தில் ரூ.50 கோடி மதிப்பில் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

Advertisement

இதில், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், விதவைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் ஓய்வூதியம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு விடுதி கட்டுதல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும். பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து வாழ்வில் முன்னேற உதவிகள் அளிக்கப்படும்.

101 கிராமங்களைத் தத்தெடுப்பது, உத்தரகண்ட் மறுவாழ்வுப்பணி ஆகிய இரு திட்டங்களும் மாதா அமிர்தானந்தமயி 60ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் செப்டம்பர் 26-27 தேதிகளில் தொடங்க உள்ளன. கேரள மாநிலம் வள்ளிக்காவு பகுதியில் உள்ள மாதாவின் ஆசிரமத்தில் இத்திட்டங்கள் முறைப்படி தொடங்கி வைக்கப்படும்.

எங்கள் மடத்தால் தத்தெடுக்கப்படும் கிராமங்களில் அடிப்படைச் சுகாதார வசதிகள், பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள், சுத்தமான குடிநீர் மற்றும் சத்துணவு ஆகியவை இருப்பதை உறுதிசெய்வோம்.

அமிர்தஸ்ரீ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்கெனவே 1 லட்சம் பெண்களை 6 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்த்துள்ளோம். அவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களைச் சந்தைப்படுத்த உதவி, அவர்களுக்கு அரசு வங்கிகளில் கடன் பெற உதவி ஆகியவற்றைச் செய்து வருகிறோம்.

இப்போது அமல்படுத்தப்படு வரும் அமிர்தா குடீரம் (குடில்) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஏற்கெனவே 45 ஆயிரம் வீடுகளை எங்கள் மடம் கட்டித் தந்துள்ளது. 41 ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைகளை அளித்துள்ளோம். 1 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம். குடிசைப்பகுதிகளில் வசித்து வந்த சுமார் 1600 குடும்பங்களை புதிய அடுக்குமாடிகளில் குடியமர்த்தியுள்ளோம். 1998ஆம் ஆண்டு முதல் 26 லட்சம் பேருக்கு சுகாதாரச் சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 1 கோடி பேருக்கும், அமெரிக்காவில் 75 ஆயிரம் பேருக்கும் எங்கள் மடம் உணவளித்து வருகிறது என்றார் அமிர்த ஸ்வரூபானந்தா.

அப்போது அமிர்தா பல்கலைக்கழக துணை வேந்தர் பி.வெங்கட்ரங்கனும் உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.