இந்தியா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய உள்துறை உத்தரவு

தினமணி

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை அரசிதழில் மத்திய உள்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

"விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையை மையமாகக் கொண்டு செயல்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும் ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்ட பிறகும் "ஈழம்' கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைப் புலி இயக்க ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்படுகின்றனர். அந்த இயக்கத்தின் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரசார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால், அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012, மே 14 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும் ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலர் பிரசாரம் செய்துவருகின்றனர். அவர்கள், இலங்கையில் விடுதலைப்புலிகளை வீழ்த்த மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இத்தகைய பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்த இயக்கத்தினராலும் அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும் பாதிப்பு நேரும் என்பதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை "பயங்கரவாத அமைப்பு' என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று உள்துறை குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு "பயங்கரவாத இயக்கம்' என அறிவித்து அதன் செயல்பாடுக்கு தடை விதித்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தடை நீட்டிக்கப்பட்டுவந்தது.

இதன் தொடர்ச்சியாக, 2010-ஆம் ஆண்டில் அந்த இயக்கத்துக்கு விதித்த தடையை மத்திய உள்துறை நீட்டித்தது. ஆனால், இந்த தடை உத்தரவு சரிதானா என்பதை ஆய்வு செய்ய தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அத் தீர்ப்பாயம் சென்னை, நீலகிரி, தில்லி உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தியது. அதன் முடிவில் "மத்திய அரசு விதித்த தடை சரிதான்' என தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வைகோவின் வழக்கை தள்ளுபடி செய்து, மத்திய உள்துறை விதித்த தடை சரியே என்று தீர்ப்பளித்தது.

அப்போது அமலில் இருந்த அவ்வியக்கத்துக்கு எதிரான தடைக் காலம் மே 13-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மே 14 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT