இந்தியா

விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

தினமணி

கிங்ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை பிறப்பிக்கக்கோரி, அமலாக்கத் துறை தொடுத்துள்ள மனு மீதான தீர்ப்பை வரும் 18ஆம் தேதிக்கு மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஒத்திவைத்தது.
 ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.950 கோடி கடன் வாங்கிக்கொண்டு, அந்தத் தொகையை கிங்ஃபிஷர் நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து, கிங் ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்தியாவை விட்டு திடீரென வெளியேறி, பிரிட்டனில் கடந்த ஒருமாதமாக வசித்து வரும் விஜய் மல்லையா, அமலாக்கத் துறையின் 3 அழைப்பாணைகளை ஏற்று விசாரணையில் நேரில் ஆஜராகவில்லை.
 இந்நிலையில், மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை பிறப்பிக்கக் கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு, பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர். பாவகே முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது அமலாக்கத் துறை சார்பில் வழக்குரைஞர் ஹிதேன் வேனிகாவோங்கர் ஆஜராகி வாதாடுகையில், "அமலாக்கத் துறை தன்னிடம் விசாரணை நடத்துவதை தவிர்ப்பதற்கும், விசாரணையை தாமதப்படுத்துவதற்கும் மல்லையா விரும்புகிறார். ஆகையால், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து வாதங்களை கேட்ட நீதிபதி பி.ஆர். பாவகே, அமலாக்கத் துறையின் மனு மீதான தீர்ப்பை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 முன்னதாக, அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டை 4 வார காலத்துக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT