ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ரோந்து சென்றபோது நேரிட்ட பனிச் சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததற்கு இந்திய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக்இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராணுவ தளபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, "ராணுவ ஊழியர்களுக்கான தளபதி (சிஓஏஎஸ்) பனிச்சரிவு நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் படைகளை அனுப்பு உத்தரவிட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.
சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் மிகப்பெரிய அளவில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
மெட்ராஸ் ரிஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ஓர் அதிகாரியும் ஒன்பது வீரர்களும் புதன்கிழமை காலை சியாச்சின் பகுதியில் (19,600 அடி உயரத்தில்) ரோந்து பணியில் இருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
புதையுண்ட அவர்களை இரண்டாவது நாளாக தேடும் பணி நேற்றும் நடைபெற்றது. அப்பகுதியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணுவத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், மாலை வரை எவ்வித முன்னேற்றமுமில்லை.
இந்நிலையில் வடக்கு காமாண்டன்ட் பிரிவின் காமாண்டர் வெளியிட்டுள்ள செய்தியில், இது ஒரு சோக நிகழ்வு, நமது எல்லைகளை பாதுகாக்கும் முயற்சியில் தங்களது உயிரையும் தியாகம் செய்த வீரர்களை வணங்குகிறோம் என கூறியுள்ளார்.
முன்னதாக பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ராணுவ வீரர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என கூறப்பட்டிருந்தது.
இது குறித்து அறிந்த பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
''சியாச்சின் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரின் முடிவு மிகவும் சோகமானதாக உள்ளது. நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களை வணங்குகிறேன். தேசமே அவர்கள் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவிக்கிறது'' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.