தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் போது தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் 7 லாரிகளின் முகப்பு கண்ணாடிகள் சேதமாகின.
கர்நாடக முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, கர்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன்னட அமைப்புகள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பெல்லாரியில் வெள்ளிக்கிழமை தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட 7 லாரிகள் மீது கன்னட அமைப்பினர் கல்வீசித் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து, ஓட்டுநர்கள் லாரியை நிறுத்துவிட்டு தப்பியோடினர். லாரிகளின் கண்ணாடியை முழுமையாக அடித்து உடைத்த கன்னட அமைப்பினர், அவற்றின் டயர்களில் இருந்து காற்றை வெளியேற்றினர்.
தமிழ் பெயர்ப் பலகைகள் அகற்றம்:
பெங்களூரில் அல்சூர், சிவாஜி நகர், சீராமபுரம், ஓகலிபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் தமிழ் அமைப்புகளின் பெயர்ப் பலகைகள், தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கன்னட அமைப்பினர் கிழிந்து எரிந்தனர்.
தமிழ் நாளிதழ்கள் எரிப்பு: பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் நாளிதழ் விநியோகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. சாமராஜ் நகரில் தமிழ் நாளிதழ்களை கன்னட அமைப்பினர் தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு, ராஜாஜி நகரில் ஊர்வலமாகச் சென்ற கன்னட அமைப்பினர் அந்தப் பகுதியில் உள்ள தமிழ் நாளிதழ் அலுவலகத்தின் மீது கல்வீசித் தாக்கினர். போலீஸாரின் அங்கு வந்ததால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது.
தமிழ் அதிகாரி வீடு முற்றுகை:
கொப்பள் மாவட்ட ஊராட்சித் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராமசந்திரன். இவர் தற்போது கொப்பள் மாவட்டப் பொறுப்பு ஆட்சியராக உள்ளார். இவர் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கர்நாடக முழு அடைப்புப் போராட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது, மீறி பங்கேற்றால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, கொப்பளில் உள்ள அவரது வீட்டை கன்னட அமைப்பினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். தனது உத்தரவை திரும்பப் பெற்றதோடு, தனது செயலுக்கு கன்னட அமைப்பினரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
இயல்புநிலை: கர்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு தென் கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அங்கு கடைகள், அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின.
மண்டியாவில் விடுமுறை:
காவிரி நதி பாய்ந்தோடும், கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்திருக்கும் மண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சனிக்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியரகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.