இந்தியா

ஜிஎஸ்டி: மத்திய அரசின் யோசனைக்கு தமிழகம் எதிர்ப்பு

DIN

சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி) அமலாக்கம் தொடர்பாக மத்திய அரசு முன்வைத்த பல்வேறு யோசனைகளுக்கு தில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
இது தொடர்பான கவுன்சிலின் இரண்டாவது கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மாநிலப் பள்ளிக் கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் பங்கேற்றுப் பேசியதாவது:
மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் பொருள்கள் விற்பனைக்கு மத்திய அரசு நான்கு சதவீத வரியை நிர்ணயித்து அதை அந்தந்த மாநிலங்களே வசூலிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பொருள்கள் மீதான மத்திய கலால் வரி, சேவை வரி உள்ளிட்ட பிற மத்திய வரிகளிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவை தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் முதலாவது கூட்டத்தின் வரைவு நிரலில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
மத்திய அரசு - மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு விஷயத்திலும் தமிழக அரசுக்கு சில கருத்துகள் உள்ளன. ரூ.1.5 கோடிக்கும் மேலாக வரவு - செலவு கணக்கு பராமரிக்கும் நிறுவனங்களை மத்திய - மாநில அரசுகள் இணைந்து கட்டுப்படுத்தலாம் என முதலாவது கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அக்கூட்டம் தொடர்பான வரைவு நிமிட நிரலில், "அனைத்து வித வரவு செலவு கணக்கு பராமரிக்கும் நிறுவனங்கள் மத்திய வரி நிர்வாக அமைப்பு மூலமே கட்டுப்படுத்தப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு ஏற்கவில்லை.
தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி வெளியே செல்லும் சரக்குகளுக்குரிய வரி விதிப்பு முறைகளை மத்திய வரி நிர்வாகத்தால் கையாள முடியாது. இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் பரஸ்பரம் நம்பிக்கை வைத்துச் செயல்பட வேண்டும். எனவே, ரூ.1.50 கோடிக்கும் அதிகமாக வரவு - செலவு பராமரிக்கும் நிறுவனங்களை மத்திய - மாநில அரசுகள் இணைந்தே கட்டுப்படுத்த வகை செய்ய வேண்டும்.
இதுவரை நடைபெற்ற மாதிரி பயிற்சியில், ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரிகள் அமலாக்கத்தை மாநிலங்கள் மேற்கொள்வதால் பிரச்னை எழவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை முரண்பாடாக உள்ளது. இதுபோன்ற தீர்க்கப்படாத பிரச்னைகளால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு மத்திய அரசு உத்தேசித்துள்ள காலம் சரியானதாக இருக்காது என்று தமிழகம் கருதுகிறது.
சரக்கு, சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பொருள்கள், நிறுவனங்களின் வரவு - செலவு தொகைக்கான உச்சவரம்பு, இழப்பீடு உத்திகள், நிர்வாக ஏற்பாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. எனவே, நிலுவையில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அதன்பிறகு ஜிஎஸ்டி அமலாக்கத்தை பொதுவான ஒரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசை மாநிலங்கள் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் முதலீடு, இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அவை செலுத்தும் மதிப்புக்கூடுதல் வரி, மத்திய விற்பனை வரி ஆகியவற்றை திருப்பி அளித்தல் உள்ளிட்ட சலுகைகளை மாநில அரசு வழங்குகிறது. இச்சலுகைகளைத் தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் விரும்பினால் அந்நிறுவனங்கள் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்தாமல் நிதி ஒதுக்கீடு மூலமாக நேரடியாக வழங்கலாம் என்ற யோசனையை தமிழகம் ஏற்கிறது. அதே சமயம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் குறிப்பிட்ட துறைக்கு மட்டும் வரிச் சலுகைகள் வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு கவனமாகச் செயல்பட வேண்டும். இதுபோன்ற முயற்சி பொருளாதார சீர்திருத்தத்தின் அடித்தளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் பாண்டியராஜன்.
இக்கூட்டத்தில் பல்வேறு மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள், தமிழக வணிக வரித் துறை ஆணையர் ச.சந்திரமௌலி உள்ளிட்ட உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT