இந்தியா

டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்: தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

DIN

அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'அதிமுக அம்மா கட்சி' துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை கடந்த 22-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு உள்படுத்திய காவல் துறையினர், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருவரும் கைது செய்யப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து, தில்லி தீஸ் ஹசார் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி முன்னிலையில் இருவரையும் காவல் துறையினர் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.
தனிப் படை கோரிக்கை: அப்போது 'குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா மூலம் பணம் அளித்துள்ளது தொடர்பாக தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை தில்லிக்கு வெளியே அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் அனுப்பிய அழைப்பாணையின்படி, இருவரும் தினமும் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை. எனவே, இருவரையும் ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தினகரன் தரப்பு வழக்குரைஞர், 'சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராகவும் முக்கிய அரசியல் கட்சியின் தலைவராகவும் தினகரன் உள்ளார். போலீஸ் கைது செய்துள்ள சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது என அவர் தெளிவுபடுத்தி விட்டார். வீட்டில் இருந்து வருகையாளர் பதிவேட்டை கொண்டு வருமாறு மட்டுமே போலீஸ் அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி விசாரணைக்கு வந்த அவரை கடந்த நான்கு நாள்களாக விசாரணை என்ற பெயரில் குற்றப் பிரிவு அலுவலகத்தில் தனிப் படையினர் பல மணி நேரம் அமர வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இது அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்டுள்ள வழக்கு. இந்த வழக்கில் தினகரனை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளோம். அதை ஏற்று உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
நீதிபதி உத்தரவு: இதையடுத்து, சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கு தொடர்புடைய விவகாரம் மிகவும் தீவிரமானது. எனவே, தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை தலா ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கிறேன். தினகரனின் ஜாமீன் மனு மீது தற்போதைய நிலையில் உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT