இந்தியா

பயங்கரவாதிகள் இல்லாத காஷ்மீரை உருவாக்க நடவடிக்கை: அருண் ஜேட்லி

DIN

பயங்கரவாதிகள் இல்லாத காஷ்மீர் பள்ளத்தாக்கை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக "இந்தியா டிவி' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
நமது நாடு, தற்போது 2 மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. அதில் ஒன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் சம்பவம் ஆகும். மற்றொன்று, நாட்டின் மையப் பகுதியில் இருக்கும் இடதுசாரி தீவிரவாதம் ஆகும்.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாக பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டதில்லை. இதனால், இந்தியா மீது அவர்கள் போர்களைத் தொடுத்தனர். அதை எதிர்கொண்டு முறியடிக்கும் திறன் இந்தியாவிடம் இருந்தது. இதை கடந்த 1965, 1971ஆம் ஆண்டு போர்கள், கார்கில் போர் ஆகியவை தெளிவாக நிரூபித்தன. இதனால், 1990ஆம் ஆண்டுகளில் தனது அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு, நமது நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டது. எல்லைக் கட்டுபாட்டு கோட்டுப் பகுதி மற்றும் சர்வதேச எல்லையில் இருக்கும் நமது படையினரின் சிறப்பான செயல்பாடுகளால், பயங்கரவாதிகளால் எல்லைத் தாண்டி வர முடியவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கை ஆயுதங்களை ஏந்தியிருக்கும் பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் நமது பாதுகாப்புப் படை தற்போது ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் மதிப்பிழப்பு முடிவின் காரணமாக, பயங்கரவாதிகள் மற்றும் பிற குழுக்களுக்கு கிடைத்த நிதி நின்றுவிட்டது. அவர்களின் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்த வெளிநாடுகளில் இருந்து நிதி அனுப்பப்பட்ட விவகாரத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் திரண்ட மக்கள், கற்களை வீசித் தாக்குதல் நடத்தி வந்தனர். அவர்களின் பாதுகாப்பின்கீழ், பயங்கரவாதிகள் பலமுறை தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் தற்போது அது பழங்கதையாகி விட்டது. இதற்கு முன்பு நூற்றுக்கணக்கில் வந்த மக்களின் எண்ணிக்கை, 20ஆகவும், 30ஆகவும், 50ஆகவும் குறைந்துவிட்டது. இதனால், முதல்முறையாக எங்களது நடவடிக்கையால், பயங்கரவாதிகள் பணத்துக்காக வங்கிகளை கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பயங்கரவாதிகள் தற்போது கடுமையான நெருக்கடியில் இருக்கின்றனர். அவர்கள் தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது. அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் பெரிய அளவில் பாதிப்பில்லை. சில தனித்தனி சம்பவம் நடந்தபோதிலும், அந்த அமைப்புக்கு இந்தியாவில் செல்வாக்கு கிடையாது.
பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கௌரவிக்கும் சம்பவங்கள் நடப்பது கவலையளிக்கிறது. ஆயுத தளவாட உற்பத்தியில், இந்தியா உலக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். இந்த இலக்கை அடையவே, ஆயுத தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுவதை ஊக்குவிக்கிறோம் என்று அருண் ஜேட்லி கூறினார்.
சிக்கிம் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதி தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளிக்க ஜேட்லி மறுத்து விட்டார். எனினும் அவர் கூறுகையில், "நமது பாதுகாப்புப் படைகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT