இந்தியா

மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: உ.பி. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து 6 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்று மாநில அரசுக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து 60 குழந்தைகள் உயிரிழந்தது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதுதான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை அறிக்கையில், மருத்துவமனையின் இரு முக்கிய மருத்துவர்கள், ஆக்சிஜன் விநியோக நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் நுதன் தாக்குர் என்பவர் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்த விஷயத்தில் மாநில அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, சில உண்மைகளை மறைக்க முயலுகிறார்கள் என்றும், தவறு செய்த சிலரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், தயா சங்கர் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரப் பிரதேச அரசு வழக்குரைஞர், இந்த மனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 'இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையின்படி அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது' என்று அவர் கூறினார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசின் மருத்துவக் கல்வி இயக்குநர் நீதிமன்றத்தில் 6 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, கோரக்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமையன்று 71 ஆக அதிகரித்தது.
குழந்தைகள் மட்டுமின்றி மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட ஏராளமானோர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான 10 நாள்களில் 60 குழந்தைகள் உள்பட 71 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT