இந்தியா

பரிசு மோசடி: எஸ்எம்எஸ், தொலைபேசி மூலம் ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு

DIN

ரிசர்வ் வங்கி பரிசளிப்பதாக குறுந்தகவல்கள் (எஸ்எம்எஸ்), தொலைபேசி அழைப்புகள் போன்றவை மூலம் கூறி நடைபெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக, அதே தகவல் தொடர்பு வழிமுறைகளைப் பின்பற்றி ரிசர்வ் வங்கி அதுகுறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
குலுக்கல் மூலமும், சிறப்புப் பரிசாகவும் ரிசர்வ் வங்கி பெரும் தொகை அளிக்கவிருப்பதாகக் கூறி, குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவை மூலம் பொதுமக்களுக்கு ஏமாற்றுப் பேர்வழிகள் தகவல் அனுப்பி வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் சார்பில் அனுப்புவது போலவும், சில நேரங்களில் ரிசர்வ் வங்கியின் ஆளுநரே அனுப்புவது போலவும் அந்தத் தகவல்களை அனுப்பும் நபர்கள், பெரும் தொகையை பரிசளிப்பதாகக் கூறி பொதுமக்களை தங்களது வலையில் சிக்க வைக்கின்றனர்.
பிறது, அந்தப் பரிசுத் தொகையைப் பெறுவதற்காக வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டறிந்து, அந்தக் கணக்கிலிருக்கும் தொகையைக் களவாடுகின்றனர். சிலர் பரிசுத் தொகையை அளிப்பதற்கான கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்தக் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு ஏமாற்று குறுந்தகவலில், பிரிட்டன் ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையில் ரூ.2 கோடியை அனுப்பவிருப்பதாகவும், அதற்கான "நிதி ஒதுக்கீட்டுக் கட்டணமாக' ரூ.9,500-ஐயும், வங்கிக் கணக்கு, ஆதார் எண், முகவரி போன்ற விவரங்களையும் அனுப்புமாறு கூறப்பட்டிருந்தது.
மற்றொரு ஏமாற்றுக் குறுந்தகவலில், ரிசர்வ் வங்கி நேரடியாகவே கடன் அட்டை தரவிருப்பதாகவும், அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் தரும் செல்லிடப் பேசி செயலியை (மொபைல் ஆப்) உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும், தற்போது ஏமாற்றுக்காரர்கள் பயன்படுத்தும் அதே குறுந்தகவல் முறையைப் பயன்படுத்தி விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
ரிசர்வ் வங்கி அனுப்பி வரும் ஒரு விழிப்புணர்வு குறுந்தகவலில், "ரிசர்வ் வங்கியிடமிருந்து மிகப் பெரிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டணங்களைச் செலுத்த வேண்டாம். அரசோ, ரிசர்வ் வங்கியோ அதுபோன்ற தகவல்களை யாருக்கும் அனுப்புவதில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பரிசளிப்பதாகக் கூறி வரும் தகவல்கள் குறித்து 8691960000 என்ற தொலைபேசி எண்ணுக்கு "மிஸ்டு கால்' கொடுத்து தெரியப்படுத்தும்படி ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT