ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில்களின் புறப்பாடு, வருகை தரும் நேரம் போன்ற தகவல்கள், ரயில்களில் துப்புரவுப் பணி, ரயிலில் பயணிக்கும்போது உணவு வகைகளைப் பெறுவது போன்ற பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒருங்கிணைந்த செல்லிடப் பேசி செயலி (ஆப்) ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது. 'ரயில் சாரதி' என்ற பெயரிலான இந்த செயலியை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தில்லியில் தொடங்கி வைத்தார்.
தற்போது ரயில்வே சேவைகள் தொடர்பான பல்வேறு செல்லிடப்பேசி செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. வெவ்வேறு சேவைகளைப் பெறுவதற்காகப் பயணிகள் அவற்றைத் தனித்தனியாக பதிவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தைத் தர வேண்டுமானால், இந்தச் சேவைகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த செயலி தேவைப்படுகிறது என்று சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு, புகார் செய்யும் வசதி, ரயில் சேவைகளை மேம்படுத்துவதற்கான யோசனை தெரிவிக்கும் வசதி ஆகியவையும் இந்தச் செயலியில் உள்ளன. ரயில் டிக்கெட் முன்பதிவுகள் மட்டுமின்றி விமான டிக்கெட்டுகளையும் இந்தச் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும்.
தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கு 3ஏசி பெட்டிகளில் இடஒதுக்கீடு வழங்கும் வசதி, வெளிநாட்டினர் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கு தற்போது அளிக்கப்படும் அவகாசமான 120 நாள்களை 365 நாள்களாக நீட்டிப்பது ஆகியவற்றையும் அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.