இந்தியா

ஆள்கடத்தல் வழக்குகள் விசாரணை: என்ஐஏ-வுக்கு கூடுதல் பொறுப்பு?

தினமணி

ஆள்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) அளிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 மத்திய உள்துறை மற்றும் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட ஆலோசனையையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
 பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியால் கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தில், ஆளகடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் பொறுப்பை என்ஐஏ-வுக்கு வழங்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.
 இந்த மாற்றத்தைச் செயல்படுத்த, என்ஐஏ-யை உருவாக்குவதற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய புலனாய்வுச் சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
 கடந்த 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மீட்பு) சட்டத்தின் கீழ், என்ஐஏ அமைப்புக்கு ஆள் கடத்தல் குற்றங்களை விசாரிக்கவும், அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் தேசிய அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
 அந்தப் பணிகளை, ஏற்கெனவே அமைக்கப்பட்ட என்ஐஏ-வால் மேற்கொள்ள முடியும் என்று அமைச்சரக வட்டாரங்கள் கருதுகின்றன. ஆள் கடத்தல் வழக்குகளை என்ஐஏ-வின் தனிப் பிரிவு ஒன்றை அமைத்து விசாரிக்கச் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 இதற்கான வரைவு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்தால் இதனை சட்டமாக்கும் நடவடிக்கையைத் தொடங்க அமைச்சரவைக் குறிப்பு வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 ஏற்கெனவே, ஆள் கடத்தல் வழக்குகளை தேசிய அளவிலான அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். இதுகுறித்து சக்தி வாஹினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரவி காந்த் என்பவர் கூறுகையில், "80 முதல் 90 சதவீதம் வரையிலான ஆள் கடத்தல்கள் மாநிலங்களைத் தாண்டி நடைபெறுகின்றன. இதன் காரணமாக, மாநில காவல்துறையால் அந்த வழக்குகளை சரிவர விசாரிக்க முடிவதில்லை. எனவே, அந்த வழக்குகளை தேசிய அளவிலான அமைப்பே விசாரிக்க வேண்டும்' என்றார்.
 தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தில், குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கவும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT