இந்தியா

கலப்புத் திருமணங்கள் அனைத்தும் மதமாற்ற நடவடிக்கையல்ல: கேரள உயர் நீதிமன்றம்

DIN

கலப்பு திருமணங்கள் அனைத்துமே மத மாற்றத்துக்கான நடவடிக்கைகள் என்று சித்திரிக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்தகைய தவறான பிரசாரங்களை மேற்கொள்வது தற்போது வாடிக்கையாகிவிட்டதாகவும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணுக்கும், இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி அப்பெண் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியதாகத் தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்த அப்பெண்ணின் பெற்றோர், இந்தத் திருமணம் மதமாற்ற நடவடிக்கை என்று வழக்கு தொடுத்தனர்.அதை விசாரித்த கீழமை நீதிமன்றம் அப்பெண்ணை பெற்றோருடன் செல்ல அனுமதித்தது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய இளைஞர் முறையீடு செய்தார்.
அதுதொடர்பான விசாரணையின்போது நீதிபதிகள் முன்பு ஆஜரான சம்பந்தப்பட்ட பெண், அவரது பெற்றோர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். யோகா மையமொன்றில் தன்னை அவர்கள் அடைத்து வைத்ததாகவும், மீண்டும் ஹிந்து மதத்துக்கு மாறுமாறு நிர்பந்தித்ததாகவும் தெரிவித்தார். மேலும், தனது கணவருடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து இந்த விவகாரம் மீது நீதிபதிகள் சிதம்பரேஷ், சதீஷ் நைனன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:
சமீபகாலமாக கலப்புத் திருமணங்கள் அனைத்துக்கும் மதமாற்ற சாயம் பூசும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய செயல்பாடுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிக அளவில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளது. அது முழுக்க, முழுக்க சரியான கருத்து.
சம்பந்தப்பட்ட இளைஞரும், பெண்ணும் மணம் முடித்துக் கொண்டது சட்டப்படி செல்லுபடியாகும். அதற்கான திருமணப் பதிவை அவர்கள் முறைப்படி மேற்கொண்டுள்ளனர் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT