இந்தியா

பெட்ரோல், டீசல் வாகனத் தயாரிப்பு: நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி எச்சரிக்கை

DIN

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறாமல் பெட்ரோல் - டீசல் வாகனங்களையே தொடர்ந்து உற்பத்தி செய்தால் அந்த வாகனங்கள் வீணாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பெட்ரோல், டீசல் எரிபொருள்களைத் தவிர்த்துவிட்டு, நாம் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும். அதற்காக, மின்சாரத்தில் இயங்கும் வாகனத் தயாரிப்புக்கு வாகன உற்பத்தியாளர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, பெட்ரோல் - டீசல் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்துவிட்டு, அவற்றுக்குத் தடை விதிக்கும் நிலையில் 'எங்களிடம் வாகனங்களின் இருப்பு அதிகம் உள்ளது, எனவே தடை விதிக்கக்கூடாது' என்று புலம்பும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நிறுவனங்கள் தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது.
குறிப்பிட்ட காலத்துக்குப் பின் எவ்வளவு பெட்ரோல் - டீசல் வாகனங்கள் இருப்பில் இருந்தாலும் அதை 'புல்டோஸர்' இயந்திரத்தில் நசுக்கி அழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்குவோமே தவிர, அவற்றுக்கான தடையை திரும்பப் பெற மாட்டோம்.
எரிபொருள் இறக்குமதியையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிக தீர்க்கமாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, அரசின் கொள்கைகளுக்கு எதிரான முடிவுகளை நிறுவனங்கள் எடுத்தால் அது அந்த நிறுவனங்களுக்குத்தான் பிரச்னையை ஏற்படுத்தும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக பெட்ரோல் டீசல் வாகனத் தடை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தாமதமானது. தற்போது அந்த வரிவிதிப்பு முறை அமலாகிவிட்டதைத் தொடர்ந்து, அதுதொடர்பான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
முதல்கட்டமாக அமைச்சரவை கூடி, நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்களை அமைப்பது குறித்து அமைச்சரவைக் குறிப்பைத் தயாரித்துள்ளது. இந்தக் குறிப்பு நிதியமைச்சரிடம் அளிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மின்சாரத்தில் இயங்கும் கார்கள், பேருந்துகள், பைக்குகள்தான் இந்தியாவின் எதிர்காலம் என்பதையும், டீசல் - பெட்ரோல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதையும் நிறுவனங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் எரிபொருளைத் தயாரிக்க 15 ஆலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பருத்தி, கோதுமை, நெல் ஆகியவற்றின் வைக்கோல், மூங்கில் போன்ற சாதாரண வேளாண் பொருள்களிலிருந்தே இந்த எரிபொருளைத் தயாரிக்க முடியும்.
பெட்ரோலிய இறக்குமதிக்காக ஆண்டுதோறும் ரூ.7 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தொகையை மிச்சப்படுத்த முடியும் என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்து, பதவி விலகும் எஸ்ஐஏஎம் தலைவர் வினோத் கே தாசரி கூறுகையில், இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் அரசு எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
மேலும், அரசு தனது கொள்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும், நீதிமன்றங்கள் போன்ற அமைப்புகளால் அரசின்அறிவிப்புகள் நிறுத்திவைக்கப்படுவதன் காரணமாக நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT