இந்தியா

ஒரு ஆசிரமத்தில் சோதனை செய்ய இவ்வளவு முன்னேற்பாடுகளா?

DIN


சிர்சா: ஹரியாணா மாநிலம், சிர்ஸா நகரில் உள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகத்தில் பாதுகாப்புப் படையின் உதவியோடு பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 25-ஆம் தேதி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 35 பேர் உயிரிழந்துவிட்டனர்.

பஞ்ச்குலா, சிர்ஸா ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், பலர் பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த தேரா அமைப்பின் அலுவலகங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த குர்மீத்தின் ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிர்ஸா நகரில் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தேரா அமைப்பின் தலைமையகத்தில் சோதனை நடத்த அனுமதி கோரி மாநில உயர் நீதிமன்றத்தை ஹரியாணா மாநில அரசு அணுகியது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.கே.எஸ். பவார் மேற்பார்வையில் சோதனை நடத்த அனுமதி அளித்தது.

இதையடுத்து, ஏ.கே.எஸ் பவார் தலைமையில், தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகத்தில் இன்று சோதனை தொடங்கியது. அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தேரா அமைப்பின் தலைமையகம் அமைந்திருக்கும் பகுதியில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்துக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி தடை போடப்பட்டுள்ளது.
 

தலைமையகத்தைச் சுற்றிலும் காவல்துறை வாகனங்கள், துணை ராணுவப் படையின் வாகனங்கள், துரித நடவடிக்கைக் குழுவின் வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அரசின் பல்வேறுத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதால், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் மட்டுமின்றி, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படை வீரர்கள், துணை ராணுவப் படை வீரர்கள் என ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறை வாகனங்கள், கனரக வாகனங்கள், டிராக்டர்களும் அவசரத் தேவைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

தேரா தலைமையகத்தில் நடைபெறும் இந்த சோதனை நிச்சயம் அமைதியான முறையில் நடந்து முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும், எங்களது சோதனைக்கு தேரா நிர்வாகமும் ஒத்துழைப்பு அளிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது என்றும் ஹரியானா காவல்துறை டிஜிபி பிஎஸ் சாந்து கூறியுள்ளார்.

மேலும், உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கிகளை தேரா அமைப்பினர் சிலர் காவல் துறையிடம் ஒப்படைத்துவிட்டனர். சிலர் மட்டும் துப்பாக்கிகளை இன்னமும் ஒப்படைக்காமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனையை முன்னிட்டு ஹரியாணா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் சேல்போன் சேவை துண்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT