இந்தியா

அர்ஜன் சிங்குக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு

DIN

இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி அர்ஜன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக தில்லியில் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அர்ஜன் சிங்குக்கு (98), சனிக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இரவு 7.30 மணியளவில் அவர் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு தில்லி பிரார் சதுக்கத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி திங்கள்கிழமை
அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் அஞ்சலி: தில்லியில் உள்ள அர்ஜன் சிங்கின் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
அத்வானி, சோனியா இரங்கல்: அர்ஜன் சிங்கின் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
அனைவரையும் வழிநடத்திச் சென்ற பிரகாசமான விளக்கை பாதுகாப்புத் துறை இழந்துவிட்டது என்று அர்ஜன் சிங்கின் மறைவுக்கு அத்வானி இரங்கல் செய்தி வெளியிட்டார்.
விமானப் படை தலைமைத் தளபதி வீரேந்திர சிங் தனோவா, கடற்படைத் தலைமைத் தளபதி சுனில் லம்பா, ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் ஆகியோரும் அர்ஜன் சிங்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய விமானப் படையிலேயே உயர் பதவியான "விமானப் படை மார்ஷல்' பட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டு அர்ஜன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இது, ராணுவத்தின் "ஃபீல்டு மார்ஷல்' பட்டத்துக்கு நிகரானதாகும். இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரி அர்ஜன் சிங்தான்.
கடந்த 1964 முதல் 1969, ஜூலை 15-ஆம் தேதி வரை விமானப் படை தலைமைத் தளபதியாக பதவி வகித்த அவர், பின்னர் ஸ்விட்சர்லாந்து மற்றும் வாடிகனுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றினார். அதன்பிறகு, கென்யாவுக்கான இந்திய தூதராக பணியாற்றினார். தில்லி துணைநிலை ஆளுநராகவும் அர்ஜன் சிங் பொறுப்பு வகித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT