இந்தியா

எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு

DIN

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த நான் நாட்டின் உயர் பதவியை எட்டியதைப் பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வதாக என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில், உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தலித் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது பல்வேறு வட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறை நோக்குடன் நடந்து கொள்வதாக மோடி குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.
ஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.
பாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.
இது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. பாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT