இந்தியா

அஸ்ஸாம்: புதிதாக 7 அமைச்சர்கள் பதவியேற்பு

தினமணி

அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் தனது அமைச்சரவையில் புதிதாக 7 அமைச்சர்களை வியாழக்கிழமை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அந்த மாநில அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.
 பாஜகவைச் சேர்ந்த சித்தார்த்த பட்டாச்சாரியா, பாபேஷ் காலிதா, சம் ரோங்ஹாங், தபான் கோகோய், பிஜுஷ் ஹசாரிகா ஆகியோரும், அசாம் கண பரிஷத்தைச் சேர்ந்த பானி பூஷண் செளதுரி, போடோலாந்து மக்கள் முன்னணியின் சந்தன் பிரம்மா ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
 மாநில ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஜகதீஷ் முகி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அந்த மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுவாகும்.
 புதிதாக இணைந்துள்ள அமைச்சர்களில் 4 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்தும், 3 பேருக்கு இணையமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளன. இதில் அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்களும் முந்தைய அரசுகளின்போது அமைச்சர்களாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
 அஸ்ஸாம் அமைச்சரவையில் 19 உறுப்பினர்கள் இடம்பெறலாம். கடந்த 2016-இல் சர்வானந்த சோனோவால் முதல்வராகப் பதவியேற்றபோது அவரோடு 8 கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய 2 இணையமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தற்போது புதிய அமைச்சர்களையும் சேர்த்து 18 உறுப்பினர்கள் அமைச்சரவையில் உள்ள நிலையில், ஒரு இடம் காலியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT