இந்தியா

தில்லியை தாக்கத் திட்டமிட்ட பயங்கரவாத அமைப்பினர்: 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு 

DIN

புது தில்லி: தில்லியை தாக்கத் திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினர் பத்து பேரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் தேசிய விசாரணை முகமை மனுதாக்கல் செய்துள்ளது.

தில்லி உள்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்யவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) முறியடித்துள்ளது. 

தாக்குதல் சதித் திட்டத்தை தீட்டியிருந்ததாக தில்லி, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகளையும் என்ஐஏ புதனன்று கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தில்லியில் என்ஐஏ அமைப்பின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டல் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இராக், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். அமைப்பின் மீதுள்ள ஈர்ப்பால், இந்தியாவில் புதிய பயங்கரவாத அமைப்பை சிலர் உருவாக்கியிருப்பதாக என்ஐஏ அமைப்புக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதனடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முகம்மது சோஹைல் (29) என்பவர் சுமார் 4 மாதத்துக்கு முன்பு ஹர்கத்துல் ஹர்ப் இ இஸ்லாம் (இஸ்லாம் மதத்துக்காக போர்) என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கியது தெரிய வந்தது. வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் மூலம் அந்த அமைப்பு பயங்கரவாதிகள் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த பயங்கரவாத அமைப்பினரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதை கண்ட என்ஐஏ அமைப்பினர், சுதாரித்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு, உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படையின் உதவியை கோரினர். பின்னர் தில்லி, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட், அம்ரோஹா, லக்னௌ ஆகிய பகுதிகளில் உள்ள 17 இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது சோஹைல் உள்பட 16 பேர் பிடிபட்டனர். அவர்களில் 10 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. எஞ்சிய 6 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர். கைது செய்யப்பட்ட 10 பேரும், அம்ரோஹா, சீலாம்பூர் மற்றும் ஜாப்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கு எதிராகவும் கிரிமினல் பின்னணி எதுவும் இல்லை. சொந்த நிதியிலேயே செயல்பட்டு வந்துள்ளனர்.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும், பைப் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தவும் தயார் நிலையில் இருந்தனர். பயங்கரவாதிகள் 10 பேரில், ஒருவர் பொறியியல் மாணவர். இன்னொருவர் 3ஆம் ஆண்டு கல்லூரி மாணவர். 2 பேர் வெல்டிங் தொழிலாளிகள். குண்டுவெடிப்புகளை எப்படி நிகழ்த்துவது என்பது குறித்து சோஹைல் செயல்முறை பயிற்சி அளிப்பது தொடர்பான விடியோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதுதவிர்த்து, மிகப்பெரிய அளவில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில், நாட்டு தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டுகள், தற்கொலைத் தாக்குதல் நடத்த பயன்படும் ஆடைக்கான பொருள்கள், 12 கைத் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள், 100 செல்லிடப் பேசிகள், 135 சிம்கார்டுகள் ஆகியவையும் அடங்கும்.

ரூ.7.5 லட்சம் ரொக்கம், வெடிகுண்டுகளை இயக்க பயன்படும் 100 அலாரம் கெடிகாரங்கள், வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட், பெட்டாசியம் கிளோரேட், சல்பர் உள்ளிட்டவை 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

பயங்கரவாதிகள் அனைவரும் தாக்குதல் நடத்த வேண்டிய முக்கிய அரசு அலுவலகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரை ஏற்கெனவே நோட்டம் பார்த்துள்ளனர். அவர்களது தயார் நிலையை பார்க்கையில், தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது தெரிய வருகிறது. 

வெளிநாட்டில் இருப்போரால் புதிய பயங்கரவாத அமைப்பு வழி நடத்தப்பட்டிருக்கலாம் என்று என்ஐஏ நம்புகிறது. இதுகுறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது என்றார் அலோக் மிட்டல்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம், தில்லி காவல்துறை தலைமையகம் ஆகியவை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தில்லியை தாக்கத் திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினர் பத்து பேரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் தேசிய விசாரணை முகமை மனுதாக்கல் செய்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட 10 பேரும் பலத்த பாதுகாப்புடன் வியாழனன்று தில்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களின் முகங்களை துணியால் மறைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர். 

அவர்களிடம் இருந்து மேலும் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்ஐஏ தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT