இந்தியா

குழந்தைகளின் நலனுக்காக தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்

DIN

'நமது நாட்டில் குழந்தைகளின் நலனுக்காக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுத்தப்பட வேண்டும்; இல்லையெனில், உலகின் தொழில்நுட்ப மையங்களில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமை வெறும் ஏட்டளவில்தான் இருக்கும்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறார் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளை, மத்திய, மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள், சிறார் நீதி வாரியங்களிலும் (ஜேஜேபி), குழந்தைகள் நலக் குழுக்களிலும் (சிடபிள்யுசி) தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கான அவசியம் உள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:
உலகின் தொழில்நுட்ப மையங்களில் இந்தியாவும் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், குழந்தைகளின் நலனுக்காக தொழில்நுட்பங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாவிட்டால், மேற்கண்ட பெருமை வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும். 
சிறார் நீதி வாரியங்களிலும், குழந்தைகள் நலக் குழுக்களிலும் கணினிகள் மற்றும் இதர தொழில்நுட்ப சாதனங்கள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளன. கணினிகள், இணைய வசதி மூலம் குழந்தைகள் தொடர்பான விவரங்களை சேகரிப்பது எளிது.
காணாமல் போகும் குழந்தைகளை மீட்கவும், ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை மீட்கவும் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும். இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறார் நீதி வாரியங்களுக்கும், குழந்தைகள் நலக் குழுக்களுக்கும் தேவையான மென்பொருள் மற்றும் வன்பொருள் சாதனங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
இதேபோல, சிறார் தொடர்பான வழக்குகளில் காணொளி காட்சி முறையில் (விடியோ கான்பரன்சிங்) விசாரணை மேற்கொள்ளும்போது, சிறார்கள் சந்திக்கும் பல்வேறு சிரமங்களை தவிர்க்க முடியும்.
மேலும், சிறார் குற்றவாளிகள் தொடர்பான விவரங்களை சேகரிப்பதற்காக, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இணையவழி நடைமுறையை உருவாக்கியுள்ளது. இது பாராட்டத்தக்கது. தகவல்கள் சேகரிப்புக்கு மட்டுமல்லாது, சிறார் நீதிச் சட்டம் (குழந்தைகள் பாதுகாப்பு) தொடர்புடைய இதர விவகாரங்களை கையாளவும் தொழில்நுட்பங்களை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT