இந்தியா

பிறரின் உரிமைகளைப் பாதுகாக்க பேச்சுரிமையை முறைப்படுத்துவது அவசியம்: வெங்கய்ய நாயுடு

DIN

பிறரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு, பேச்சுரிமையை முறைப்படுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியதாவது:
பேச்சுரிமை சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிறரது உரிமைகளை பாதுகாப்பதற்கு, அந்த பேச்சுரிமையை முறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாற்றுக்கருத்து என்பது ஏற்புடையதுதான். ஆனால், அதேநேரத்தில் பிரிவினை என்பது நமது நாட்டில் ஏற்புடையது அல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பிரிவினைவாதம், எந்த நாட்டாலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.
சில சம்பவங்கள், என்னை கவலையடைய செய்துள்ளன. நாட்டில் 740 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதில் 730 பல்கலைக்கழகங்கள் அமைதியாக உள்ளன. சில பல்கலைக்கழகங்களில் மட்டும்தான் பிரச்னைகள் நிலவுகின்றன. தேவையில்லாத சர்ச்சைகள் மூலம், அந்த பல்கலைக்கழகங்கள் செய்திகளில் அடிபடுகின்றன.
சில இடங்களில், பல்கலைக்கழகத்தில் மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மாட்டிறைச்சியை நீங்கள் உண்ண விரும்பினால், அதை நீங்கள் உண்ணலாம். ஆனால், எதற்காக கல்லூரியில் அதுதொடர்பான விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்? பிறரின் உணர்வுகளை இதன்மூலம் ஏன் காயப்படுத்த வேண்டும்? சில மாணவர்களோ, பயங்கரவாதி அப்சல் குருவை பாராட்டி பேசுகின்றனர்.
நமது அண்டை நாடுகளில் ஒரு நாடு, நமக்கு எதிராக பயங்கரவாதத்தை வளர்த்து விடுகிறது. நமது நாட்டுக்கு பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது (பாகிஸ்தானை அவர் மறைமுகமாக சாடினார்). பயங்கரவாதத் தாக்குதல்களால் மும்பை மக்கள் சந்தித்த அபாயங்கள் குறித்து உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும். அடுத்த 7 ஆண்டுகளில், உலகில் 3ஆவது பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியமும், உலக வங்கியும் கணித்துள்ளன. அதேவேளையில், நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பின்னரும், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இன்னும் வறுமை கோட்டுக்கு கீழ்தான் உள்ளனர். அதே எண்ணிக்கையில், எழுதவும், படிக்கவும் தெரியாத மக்களும் உள்ளனர்.
சாதி, மத அடிப்படையில், நமது நாட்டில் சமூகரீதியில் பாகுபாடும் காட்டப்பட்டு வருகிறது. இந்த செயற்கை முட்டுக்கட்டைகளை நாம்தான் உருவாக்கியுள்ளோம். ஆனால், புராணங்களையும், வேதங்களையும் பாருங்கள். அதிலிருந்து ஆணுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட்டு வந்ததை நாம் தெரிந்து கொள்ளலாம் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT