இந்தியா

காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதரவு இல்லை: பஞ்சாப் முதல்வரிடம் கனடா பிரதமர் உறுதி

DIN

காலிஸ்தான் உள்பட எந்த பிரிவினைவாத இயக்கத்துக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்ற பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிடம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
பஞ்சாபில் பிரிவினைகோரி ஆயுதம் ஏந்தி போராடி வந்தது காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம். 1984-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 'புளூ ஸ்டார்' நடவடிக்கையால், அந்த அமைப்பு ஒடுக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் அதற்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்தியா அதிருப்தி: கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்கள், ட்ரூடோவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் நடைபெற்ற காலிஸ்தான் தின நிகழ்ச்சியில் ட்ரூடோ பங்கேற்றது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஹோட்டலில் சந்திப்பு: இந்நிலையில், ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸுக்கு புதன்கிழமை வந்த ட்ரூடோவை மாநில முதல்வர் அமரீந்தர் சிங், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நேரில் சென்று சந்தித்தார். சுமார் 40 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது. கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஜீத் சஜ்ஜன், பஞ்சாப் மாநில நிர்வாகம் மற்றும் சுற்றலாத் துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
ட்ரூடோ உறுதி: சந்திப்பு குறித்து பஞ்சாப் மாநில அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கனடாவில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரக் கூடாது என்று முதல்வர் அமரீந்தர் சிங் ட்ரூடோவிடம் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு உள்பட எந்த அமைப்புக்கும் கனடா அரசு ஆதரவு அளிக்காது என்று உறுதியளித்தார்.
பஞ்சாபில் பிரிவினைவாதத்தையும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் கனடாவில் இருந்து செயல்படும் 9 அமைப்புகளின் பட்டியலை ட்ரூடோவிடம் அமரீந்தர் சிங் அளித்தார். இந்த அமைப்புகள் பஞ்சாபில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் ஆயுதங்களை அனுப்புவது, கொலைச் சதிக்கு திட்டமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதையும் அவரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வேறு எந்த நாட்டிலும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் அமைப்புகளுக்கு கனடா அரசு ஆதரவு அளிக்காது என ட்ரூடோ மீண்டும் உறுதியுடன் தெரிவித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் நம்பிக்கை: இந்த சந்திப்புக்குப் பிறகு சுட்டுரையில் (டுவிட்டர்) அமரீந்தர் சிங் வெளிட்டுள்ள பதிவுகளில், 'கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த வாக்குறுதி திருப்தி அளிப்பதாக உள்ளது. கனடாவில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளை முறியடிக்க இந்தியாவுக்கு கனடா முழுமையாக உதவும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு அமிருதரஸில் உள்ள சீக்கியர்களின் புனிததலமான பொற்கோயிலுக்கு தனது மனைவி, குழந்தைகளுடன் ட்ரூடோ சென்றார். சீக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து சென்ற அவர்களுக்கு பொற்கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT