கைது ஆணையை ரத்து செய்யக் கோரி சோக்ஸி மனு
கடன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெஹுல்
கடன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெஹுல்
சோக்ஸி, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை ரத்து செய்யக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கிகளிடம் இருந்தும் தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் ரூ.13,000 கோடிக்கும் மேல் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. தற்போது விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அமைப்புகள், இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் (தேடப்படும் நபர்கள்) பிறப்பிக்க நடவடிக்கை எடுத்தன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் சோக்ஸிக்குக்கு எதிராக இரு முறை கைது ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், தமக்கு எதிரான கைது ஆணையை ரத்து செய்யக் கோரி சோக்ஸி தரப்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
கடன் சுமை, நிதி பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இத்தகைய சூழலில், எனது வர்த்தகத்தையும், தொழிலையும் மீண்டும் தொடங்க முடியாது. முன்னதாக, எனது நிறுவனத்தில்
பணியாற்றிய ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை. வாங்கிய கடன்களும் நிலுவையில் உள்ளன. அதனை தற்போது திருப்பி அளிக்க இயலாத நிலையில் உள்ளேன். இதற்கு நடுவே எனது உடல் நிலையும் மோசமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், நான் இந்தியா திரும்பினால், எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கும்பல் படுகொலைகள் அண்மைக் காலமாக இந்தியாவில்
அதிகமாக நடைபெறுகின்றன. அத்தகைய சம்பவம் எனக்கும் நேர வாய்ப்புள்ளது. எனது ஊழியர்கள், கடன் கொடுத்தவர்கள், இந்திய சிறை அலுவலர்கள், கைதிகள் உள்ளிட்டோர் மூலமாக எனது
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப் பரிசீலித்த நீதிபதி ஆஸ்மி, சோக்ஸியின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்திதினார். அதைத் தொடர்ந்து மனு மீதான மீதான விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.