ரயில்வே பணி தருவதாக மோசடி: 8 பேரை கைது செய்தது சிபிஐ
உத்தரப் பிரதேசத்தில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 8 பேரை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 8 பேரை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதற்காக ரயில்வே இணையதளம் போன்று போலியாக ஒரு இணையதளத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரயில்வேயில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆளெடுப்பதாகக் கூறி ஏராளமானவர்களிடம் தலா 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக தில்லி, லக்னெள, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் மோசடியாளர்கள் நடத்த அலுவலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான போலி ஆவணங்கள், போலி முத்திரைகள், ரொக்கம், மோசடிக்கு பயன்படுத்திய கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடி செய்வது வெளியே தெரியாமல் இருப்பதற்காக ரயில்வேயில் நடப்பதுபோலவே ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்றுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனையில் இருந்து உடல் தகுதிச் சான்றிதழ் பெற்றுத் தரவும் கூறியுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். தேர்வு செய்யப்படவர்களின் பெயர்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக அவர் கூறி நம்பவைத்துள்ளனர்.
லக்னெளவில் உள்ள சார்பங் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு அறையே அலுவலகமாக மாற்றி மோசடி செய்துள்ளனர். எனவே, பலரும் அவர்களை நம்பி பணம் கொடுத்துள்ளனர் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.