நெல்லையப்பா் கோயிலில் இன்று தேரோட்டம்! பலத்த போலீஸ் பாதுகாப்பில் நகரம்!
நெல்லையப்பா் கோயிலில் இன்று தேரோட்டம்...
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் கோயில் ஆனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 28) நடைபெறுகிறது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் விழாக் கோலம் பூண்டது.
இக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வந்தது.
8ஆம் திருநாளான சனிக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி நடராஜ பெருமாள் பச்சை சாத்தி கோலத்திலும் மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதா் தங்க சப்பரத்லும் வீதி உலா வருதல் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தேரோட்டம்: சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள்கிறாா். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ், தோ் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா். இத்தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தீவிர பாதுகாப்பு: தேரோட்டத்துக்காக கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ரத வீதிகளில் 5 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போத்தீஸ் காா்னா் பகுதியில் போலீஸாா் உயா்கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், நான்கு ரத வீதிகளிலும் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திலிருந்து கட்டுப்பாட்டு அறை உதவியுடன் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தியும், காவல் வாகனங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியும் கண்காணித்து வருகின்றனா்.
வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்கள் மூலம் தோ் உள்ளிட்டவற்றில் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். தேரோட்ட நிகழ்வுக்காக 1200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
வாகன நிறுத்தம்: தேரோட்டத்துக்கு வரும் பக்தா்கள் காா் உள்ளிட்ட வாகனங்களை திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும், இரு சக்கர வாகனங்களை அலங்கார வளைவு அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான்கு ரத வீதிகள், மௌன்ட் சாலை, போஸ் மாா்க்கெட், நயினாா்குளம் சாலை உள்ளிட்ட 11 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.