இந்தியா

மோடி அமைச்சரவை: தெலுங்கு தேசம் அமைச்சர்கள் இன்று விலகல்

DIN

மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் விலகும் என்று தெரிகிறது.
சிறப்பு அந்தஸ்து விவகாரம்: புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதனை அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த முடிவை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் சார்பில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.செளதரி ஆகியோர் இப்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
உதவும் எண்ணம் இல்லை: இது தொடர்பாக அமராவதியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறுகையில், 'எங்கள் அமைச்சர்கள் இருவரும் வியாழக்கிழமை ராஜிநாமா கடிதத்தை அளிப்பார்கள். இது முதல் கட்ட நடவடிக்கைதான். பாஜகவுடனான கூட்டணியைத் தொடர்வது குறித்து விரைவில் முடிவு செய்வோம். 
ஆந்திர மாநிலத்துக்கு உதவும் எண்ணத்தில் மத்திய அரசு இல்லை என்று தெரிகிறது. அவர்கள் ஏற்கெனவே இதனை முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இப்போது கூறியுள்ளது, அதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
அமைச்சராக இருப்பதில் அர்த்தமில்லை: மக்களுக்குப் பணியாற்றுவதற்காவே மத்திய அமைச்சரவையில் இணைந்தோம். இப்போது, ஆந்திர மக்களுக்கான தேவையைக் கூட செய்துதர முடியாத நிலையில், மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி தொடர்ந்து இடம் பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி மேலாவது ஆந்திர மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்' என்றார்.
முன்னதாக, 'ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அளிக்காது. அதே நேரத்தில் சிறப்பு அந்தஸ்துக்கு இணையான நிதியுதவி மாநிலத்துக்கு அளிக்கப்படும்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துவிட்டார்.
ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக விலகல்: சந்திரபாபு நாயுடுவின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திரத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ராவ், டி.மாணிக்யாலா ராவ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT