இந்தியா

முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு: சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பு

DIN

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) மாநிலத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி புதன்கிழமை மாலை பதவியேற்கிறார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பெங்களூரில் உள்ள விதான் சௌதாவில் மாலை 4.30 மணியளவில், குமாரசாமிக்கும், பரமேஸ்வருக்கும் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார். 
இதுதொடர்பாக, பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சு வார்த்தை நடத்திய மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு விதான்செளதாவில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் நான் முதல்வராகவும், ஜி.பரமேஸ்வர் துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து, மே 25-ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்து அமைச்சரவையில் யாரை சேர்த்துக் கொள்வது என்பதை அக் கட்சியினர் இரண்டொரு நாளில் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மஜத கட்சி சார்பில் அமைச்சர்கள் யார் என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்றார்.
மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: காங்கிரஸ், மஜத தலைவர்கள் கூட்டணி அரசு குறித்து விவாதித்தோம். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் உள்பட 22 அமைச்சர் பதவிகளும், மஜதவுக்கு முதல்வர் பதவி உள்பட 12 அமைச்சர்கள் பதவிகளும் வழங்குவது என முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவியும், மஜத சார்பில் கட்சிக்கு துணை சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் வழங்குவது என முடிவு செய்துள்ளோம். 
அரசின் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே, ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படும். லிங்காயத்து சமுதாயத்தினருக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அதுகுறித்து தற்போது விவாதிக்கவில்லை என்றார் அவர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
பதவியேற்பு விழாவையொட்டி விதான் செளதா அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜகவுக்கு எதிரான கூட்டணி?: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க இருக்கிறார். இதன் மூலம் கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. எனினும், இந்தப் பதவியேற்பு விழா தேசிய அளவில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில், பாஜகவுக்கு எதிரான கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இதனால், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைவதற்கு இந்த நிகழ்ச்சி அச்சாரமாக விளங்கும் என்றும் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT