இந்தியா

ராகுல் காந்தியின் பகல் கனவுக்கு தடை ஏது!: பிரகாஷ் ஜாவடேகர் கிண்டல்

DIN

பிரதமர் பதவியேற்க தாம் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதில் அளிக்கையில், பகல் கனவு காண்பதற்கு நாட்டில் தடையேதும் இல்லை என்றார்.
சுட்டுரையில் எழுதுவது மற்றும் நீண்ட நேரம் பேசுவது மட்டுமே அரசியல் அல்ல என்றும் ஜாவடேகர் கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் வெற்றியை பெருமானால், தாம் பிரதமராக பதவியேற்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேட்டி அளித்தார். அப்போது, ராகுல் காந்தியால் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ள சவால், மோடியில்லா பாரதம் அமைப்போம் என்று ராகுல் காந்தி பேசி வருவது மற்றும் கர்நாடக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஜாவடேகர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
சுட்டுரையில் பதிவு போடுவதும், நீண்ட நேரம் பேசுவதும் அரசியல் ஆகி விடாது. அரசியல் என்பது அதையும் தாண்டிய ஒன்று.
1984-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது பாஜகவில் இரண்டு பேர் மட்டுமே எம்.பி.க்களாக வெற்றி பெற்றனர். அதே பாஜக கடந்த தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அன்றைக்கு 400 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 40 எம்.பி.க்களாக குறைந்துள்ளது. பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டில் 20 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது. ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. அந்த வகையில், பிரதமராக வருவது குறித்து ராகுல் காந்தி சிந்திப்பாரேயானால், நாட்டில் பகல் கனவு காண்பதற்கு தடை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மோடியில்லா பாரதம் அமைப்போம் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லை. மோடியை எதிர்ப்பதையே கொள்கையாக இருக்குமானால், அந்த அரசியலுக்கு நாட்டில் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. அதிலும் தேசிய அளவிலான கட்சியாக இருந்து கொண்டு மோடியை எதிர்ப்பதையே காங்கிரஸ் கொள்கையாக கொண்டிருக்குமானால் நிச்சயம் அது மலிவான அரசியல்தான்.
கர்நாடகாவைப் பொருத்தவரையில் அரசமைப்புச் சட்டத்தின்படியே பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். பாஜகவுக்கு போதுமான பலம் கிடைக்காது என்பதை உணர்ந்ததுமே, முதல்வர் பதிவியில் இருந்து எடியூரப்பா விலகி விட்டார் என்றார் அவர்.

ஜூன் முதல் பினாமி சட்டம் அமல்

ஜூன் மாதம் முதல் பினாமி சொத்து பரிமாற்ற தடுப்புச் சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
கருப்புப் பண ஒழிப்புக்கு மத்திய அரசு நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது: பினாமி சொத்து பரிமாற்ற தடுப்புச் சட்டம் ஜூன் மாதத்தில் அமல்படுத்தப்படும். இதன் பின்னர், இங்குள்ள (மகாராஷ்டிரம்) காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களுக்கு சிக்கல் ஏற்படும். வேலையாட்கள் பெயரிலும், அடையாளம் தெரியாத நபர்களின் பெயரிலும் அவர்கள் வாங்கி வைத்துள்ள சொத்துக்கள் மற்றும் பங்களா வீடுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT