இந்தியா

பாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

தினமணி

நாட்டின் நலன் கருதி, பாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.
 மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடாவை பெங்களூரில் வியாழக்கிழமை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜகவால், நாட்டின் நலனுக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தேசிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிபிஐ, மோடி அரசின் கைப்பாவை போல செயல்படுகிறது.
 ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையில் பாஜகவினர் தலையிடுவதால், அந்த வங்கியின் ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார். ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் உறுதியான எந்தப் பதிலையும் கூறாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி, நிதி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவே, நாட்டின் நலன், ஜனநாயகம், பொருளாதாரம், சிறுபான்மை மக்கள் மீதான அச்சுறுத்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய பா.ஜ.க.வை எதிர்க்க, காங்கிரஸ் உள்பட மதச் சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவது அவசியம்.
 பிரதமர் தேர்வு குறித்து முக்கியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். எனக்கு பிரதமர் ஆவதைவிட நாட்டின் நலன் காப்பதே முக்கியம் என்றார்.
 காங்கிரஸýக்கு தேவெ கௌடா வேண்டுகோள்: பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைய வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கேட்டுக் கொண்டார்.
 இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதச் சார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவர் ஃபரூக் அப்துல்லா, மாயாவதி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். என்னையும், கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்தித்து பாஜகவுக்கு எதிரான அணிக்கு ஆதரவு அளிக்கக் கேட்டுள்ளார்.
 மதச் சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் நானும் ஈடுபட்டு வருகிறேன். என்றாலும், அவர் என்னைவிட வயதில் இளையவர். சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகிறார். நாட்டை மோசமான நிலைக்குக் கொண்டு செல்வதற்கு காரணமான பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை.
 காங்கிரஸ் கட்சியும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பல மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்துள்ள காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 2019-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான கூட்டணி உருவாக வேண்டும் என்றார்.
 பேட்டியின் போது, சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT