இந்தியா

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது சிவிசி 

DIN

புது தில்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. 

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி நிலவியது. இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கினர். இந்தச் சூழலில், அவர்கள் இருவரையும் பொறுப்பில் இருந்து விடுவித்து, கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. நாகேஸ்வர ராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐயின் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார்.  அந்த வழக்கு விசாரணையின் போது அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து  விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம்  காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. 

அதன்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) விசாரணை நடத்தி, தனது முதல்கட்ட அறிக்கையை மூடிய உறையில் வைத்து சீலிட்டு கடந்த 12-ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது. அதேபோல், சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ், கடந்த அக்டோபர் 23 முதல் 26-ஆம் தேதி வரையில் தாம் எடுத்த முடிவுகள் தொடர்பான அறிக்கையை மூடிய உறையில் சீலிட்டு உச்சநீதிமன்றத்தில் அதே 12-ஆம் தேதி சமர்ப்பித்திருந்தார். அனைத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றமானது வழக்கினை 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.   

அதன்படி அந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  

அப்போது சிவிசி விசாரணை அறிக்கையின் நகலை சீலிட்ட உறையில் வைத்து அலோக் வர்மாவிடம் வழங்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

இதுவரை பெறப்பட்ட விசாரணை அறிக்கையில் காணப்படும் சில விபரங்கள் திருப்திகரமாகவும், சில அதிருப்தியான வகையிலும் காணப்படுவதால் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிக்கை தொடர்பான தனது பதிலை தெரிவிக்குமாறு அலோக் வர்மாவை அறிவுறுத்தி, மறுவிசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதே நேரம் விசாரணை அறிக்கையின் நகலை அளிக்க வேண்டும் என்ற  சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT