இந்தியா

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

 நமது நிருபர்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 
 நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,  "கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்த போது, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களான பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளார்.
 கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
 பின்னர், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரி கூடுதல் மனுவையும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், "நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதைத் தொடர்நது, அந்த உத்தரவுக்கு எதிராக  முறையீடு செய்யுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திடம் அதிமுக வேண்டுகோள் விடுக்கும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தெரிவித்திருந்தார்.
 கேவியட் மனு: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சனிக்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "இந்த வழக்கு தொடர்பாக யாரேனும் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT