இந்தியா

ஜஸ்வந்த் சிங்கை அவமதித்த பாஜகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

DIN


மூத்த அரசியல் தலைவர் ஜஸ்வந்த் சிங்கை அவமதித்த பாஜகவுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ள மணவேந்திர சிங்  தெரிவித்தார்.
நாட்டை வழி நடத்துபவருக்கு மனிதாபிமானம் மிக முக்கியம் என்றும், அது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மிக அபரிமிதமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதையடுத்து பார்மர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அவர், தேர்தலில் தோல்வியுற்றார். பின்னர் பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார்.
அதே சமயம், ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாகவும், கட்சி வேட்பாளரை எதிர்த்தும் பிரசாரம் செய்த அவரது மகனும், அப்போதைய எம்எல்ஏவுமான, மணவேந்திர சிங், பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 
இந்தச் சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய மணவேந்திர சிங், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்றார் மணவேந்திர சிங். அவர் கூறியதாவது:
எனது குடும்பம் போல இருந்த பாஜகவில் இருந்து விலகியது சாதாரண விஷயமல்ல. ஆனால், எனது குடும்பத்திலேயே எனக்கு மதிப்பளிக்கப்படாதபோது, ஒரு நண்பர் (ராகுல் காந்தி) எனக்கு மதிப்பளித்தார். அதன் பிறகுதான் இந்த முடிவை எடுத்தேன்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாஜகவில் இருந்த நற்குணங்களும் காணாமல் போய்விட்டன. பழைய பாரம்பரியம் எதுவும் அக்கட்சியில் இல்லை. நான் எடுத்த முடிவுக்கு வாஜ்பாயின் ஆசி இருக்கும் என நினைக்கிறேன்.
எனது தந்தை ஜஸ்வந்த் சிங் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு ராஜஸ்தான் மக்கள் தற்போது பழிவாங்கவுள்ளனர். குறிப்பாக, பார்மர், ஜலாவூர், ஜெய்சல்மர், ஜோத்பூர் பகுதி மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்.
ராகுலுக்கு பாராட்டு: ஜனநாயகத்தில் அரசியல் தலைவர்களுக்கு மனிதாபிமானம் இருந்தால்தான் ஏழைகளின் வலியை உணர முடியும். ராகுல் காந்தியிடம் இது அபரிமிதமாக உள்ளது. நான் அவரை மிக நெருக்கமாக கவனித்திருக்கிறேன். ராகுலிடம் இருக்கும் மனிதாபிமானம் நாட்டில் வெகு சில தலைவர்களிடம் மட்டுமே இருக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT