இந்தியா

இந்திய உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: பிரதமர் மோடி - ரணில் ஆலோசனை

தினமணி

பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
 முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் ரணில் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
 வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார்.
 தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
 இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நமது இதயங்களில் இலங்கைக்கு சிறப்புமிக்க இடம் இருக்கிறது. பிரதமர் மோடி, இலங்கைப் பிரதமர் ரணிலை அன்போடு வரவேற்றார். இருதரப்பு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சவார்த்தையின்போது, இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த நிலை குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். குறிப்பாக, இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்று, தமிழர்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்படும் வீட்டு வசதி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மோடியும், ரணிலும் விவாதித்தனர். மேலும், தமிழர் பகுதியில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது குறித்தும் இரு தரப்பிலும் ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அமைச்சர்களுடன் ஆலோசனை: முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ரணில் விக்ரமசிங்கே சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
 இதேபோன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தும், இருதரப்பு விவகாரங்கள் குறித்து ரணில் ஆலோசனை நடத்தினார்.
 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை ரணில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT