இந்தியா

இந்தியாவில் உலகத்தர கல்வியை எட்டுவதில் இடைவெளிகள்: ராம்நாத் கோவிந்த் கவலை

DIN


இந்தியாவில் ஏராளமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இருப்பினும் உலகத் தரத்திலான கல்வியை எட்டுவதில் இடைவெளிகள் நிலவுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள சிம்பயோசிஸ் இண்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது: இந்தியாவில் 903 பல்கலைக்கழகங்களும், 39,050 கல்லூரிகளும் உள்ளன. எனினும், உலகத் தரத்திலான கல்வியை எட்டுவதில் இன்னமும் இடைவெளிகள் நிலவுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, 20 உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி தரம் உயர்த்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மூலம் உலகத் தரத்திலான கல்வியை எட்ட முடியும். குடியரசுத் தலைவர் என்ற முறையில் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது, கல்வியில் மாணவர்களை விஞ்சும் அளவுக்கு மாணவிகளின் செயல்பாடு இருப்பதை கண்டறிந்தேன். இன்றைய தினம் தங்கப் பதக்கம் பெற்ற 9 பேரில் 6 பேர் மாணவிகளே. இது மகிழ்ச்சியளிக்கிறது.
அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பை அளிப்பதுதான் கல்வி. இதனை எப்போதும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். தற்போதைய நவீன காலகட்டத்தில், எல்லைகளையும், பாலினத்தையும் கடந்ததாக கல்வி விளங்குகிறது. நமது அண்டை நாடுகளில் இருந்தும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயில வருகின்றனர். 
நமது நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் 166 நாடுகளைச் சேர்ந்த 46,144 மாணவர்கள் பயிலுகின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் கூட, 33 நாடுகளைச் சேர்ந்த 329 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் இந்தியாவின் வாழ்நாள் நண்பர்களாகவும், தூதர்களாகவும் திகழ்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ராம்நாத் கோவிந்த்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT